கருப்பு கலரை பற்றி கேவலமாக பேசிய கபில் சர்மா.. நேர்காணலிலேயே நறுக்கென்று பதிலடி கொடுத்த அட்லி
சென்னை: இயக்குநர் அட்லி தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள 'பேபி ஜான்' திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக கபில் சர்மாவின் நகைச்சுவை நிகழ்ச்சியில் அட்லி, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கபில் சர்மா அட்லியின் நிறத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு, "நீங்கள் முதன்முதலில் ஒருவரை சந்திக்கச் சென்றபோது, அவர்கள் 'அட்லி எங்கே?' என்று கேட்டார்களா?" என்று நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அட்லி, "உங்கள் கேள்வியின் அர்த்தம் புரிகிறது. என் முதல் படத்தைத் தயாரித்த ஏ.ஆர். முருகதாஸுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர் என்னிடம் கதையை மட்டுமே கேட்டார். நான் எப்படி இருக்கிறேன் என்றெல்லாம் பார்க்கவில்லை. நான் கதை சொன்ன விதம் அவரை ஈர்த்தது. உலகமும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒருவரின் தோற்றத்தை வைத்து அவர்களை மதிப்பிடக் கூடாது, இதயத்தை வைத்துதான் மதிப்பிட வேண்டும்" என்று பதிலளித்தார்.
அட்லியின் இந்த பதில் பலரின் பாராட்டுகளையும் பெற்றாலும், கபில் சர்மாவின் நாகரிகமற்ற கேள்விக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அட்லியின் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்கள் அவரது நிறத்தை வைத்து விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், கபில் சர்மாவின் இந்த கேள்வி அந்த விமர்சனங்களை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications