Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வெற்றியின் விளிம்பைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக விஜய் இருப்பார் என்றே கருத்துக்கணிப்புகள் உறுதிசெய்கின்றன.

இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று அனைத்து பரப்புரையிலும் தவறாமல் குறிப்பிட்டுப் பேசுகிறார் விஜய். ஆளும் கட்சிக்கு தாங்களே பிரதான எதிரி என்ற பிம்பத்தை விஜய் கட்டமைக்கப் போராடுகிறார். ஆனால், தேர்தல் களமோ திமுகவுக்கு அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி நிலவுவதாக எடுத்துக் காட்டுகிறது.

TVK

விஜய், தன் பிரச்சாரத்தில் அதிமுகவைப் பொருட்படுத்திப் பேசுவதே இல்லை. அந்தக் கட்சிக் கூட்டணியைக் குறிப்பிடும்போதும் கூட பாஜகவை மட்டுமே சொல்கிறார். அதிமுகவை அவர் சட்டை செய்வதே இல்லை. திமுக மீது ஊழல் புகார்களை அடுக்கடுக்காக கூறும் விஜய், அதிமுகவின் ஊழல் மீது எந்த ஒரு விமர்சனத்தையும் சுட்டிக்காட்டுவதே இல்லை.

விஜய் எப்போது திமுகதான் என இலக்கை நிர்ணயித்தாரோ அப்போதே திமுக உஷாராகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியையும் பாஜக மத்திய அரசையுமே குறிவைத்துத் தாக்கிவருகின்றன திமுக தேர்தல் பிரச்சார விளம்பரங்கள். அதிமுக தேர்தல் விளம்பரங்களும் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை மட்டுமே படம்பிடித்துக் காட்டிவருகிறது.

அதிமுக Vs திமுக இடையே மோதல்:

அப்படி இடையில் உள்ள தவெகவையும் விஜய்யையும் இந்த இரு கட்சித் தலைவர்களும் கண்டுகொள்ளவே இல்லை. எடப்பாடி பழனிசாமியின் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பதை திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மறைமுகமாக தங்களின் பிரதான அரசியல் எதிரி எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும்தான் என உணர்த்திவிட்டது திமுக. பழனிசாமியும் ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதியையும் கனிமொழியையுமே கட்டம் கட்டி தாக்கிவருகிறார்.

களத்தில் அதிமுக Vs திமுக இடையேதான் மோதல் போக்கு நிலவிவருகிறது. இடையில் புகுந்து விஜய்யோ, 'ஸ்டாலின் சார்.. ஸ்டாலின் சார்' என்று எதிர்ப்பை கூர்மை செய்து பார்க்கிறார். பந்து ஒரு பக்கம் மட்டுமே அடிக்கப்படுகிறது. எதிர் பக்கம் விஜய்யைப் பொருட்படுத்தி விளக்கம் எதுவும் வருவதே இல்லை.

இது நிஜமான தேர்தல் களம். சமூக ஊடக களமோ அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே இல்லை. அங்கே டிவிகே Vs திமுக என்ற மோதலே அதிகம் உள்ளது. திமுக ஐடி விங்க் 'குறி' வைத்து 'தற்குறி'களைத் தாக்குகிறது. அதாவது அரசியல் தெளிவற்ற கும்பல் என டிவிகேவை முத்திரை குத்தி ஒதுக்க முயல்கிறது திமுக.

தவெகவின் பிரச்சார யுக்தி மிக மோசமான தோல்வியாகவே எதிர்க்கட்சிகளால் கருதப்படுகிறது. ஆனால், விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் குவிகிறது. 2025 செப்டம்பர் 27, கரூர் சம்பவம் டிவிகே அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. 41 பேர் உயிரைக் குடித்த கொடூர சம்பவம் அது. இச்சம்பவம் நடந்து 6 மாதங்கள் மேலாகிவிட்டது. அரசியல்வாதிகளே அதைப் பெரிய அளவில் கண்டித்தன. இச்சம்பவத்தால் அவரது 'இமேஜ்' பாதித்ததாகத் தெரியவில்லை என்றே அக்கட்சி நம்புகிறது. களத்தில் கேட்கும் ரசிகர்களின் குரலும் அதை நிரூபிக்கின்றன. இது ஒரு மோசமான முன்மாதிரி.

இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 18 வயது முதல் 19 வயது வரையான வாக்காளர்கள் 12,51,749 உள்ளனர். இவர்களின் அதிக பட்ச ஆதரவு விஜய் பக்கமே உள்ளதாகக் கூடும் கூட்டங்களை வைத்து முடிவுக்கு வரமுடிகிறது. இவ்வளவு புதிய வாக்காளர்களின் தேர்வாக விஜய்யின் டிவிகே இருப்பதால், 10% முதல் 20% வரையான வாக்குகளை அக்கட்சி பெறக்கூடும் என்கிறார்கள். அப்படி எனில் 10 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

டிவிகேவைவிட விஜயகாந்த்தின் தேமுதிக அதே அளவு தமிழகம் முழுக்க பரவலான உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. கட்சியின் கட்டுமானமும் பரவலாக இருந்தது. அப்படி இருந்தும் விஜயகாந்த் போட்டியிட்ட முதல் தேர்தலில் அவர் மட்டுமே வென்றார். எனவே விஜய்யின் வெற்றியும் அதே அளவே இருக்கும் என்கிறார்கள்.

விஜய் இமேஜ் என்ன ஆனது?

ஆனால், விஜயகாந்த்திற்குப் போகும் இடமெல்லாம் இவ்வளவு இளைஞர்கள் கூடவில்லை. மாநாட்டில் மட்டுமே அந்த செல்வாக்கு இருந்தது. விஜய் ஒரு கணிக்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் ஆளும் கட்சியை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சியான அதிமுகவைப் பலவீனப்படுத்துகிறார். அதே நேரம் அவர் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பவர்களை, அம்முடிவை நோக்கிச் செல்லாமல் தடுக்கவும் செய்கிறார். எனவே விஜய்யால் முதல் பாதிப்பு அதிமுகவுக்கு. அதே சமயம் குடும்ப அரசியல் மீது வெறுப்பு கொண்ட ஒரு பகுதியினரை அவர் தன் பக்கம் இழுக்கிறார்.

இதனால் திமுக ஆதரவாளர்களையும் அவர் சிதைக்கிறார். மேலும் சாதிய கட்சியாக பலம் பொருந்தி உள்ள கட்சிகளையும் அவரது வருகை பாதிக்கச் செய்யும் . ஆகவே பல கட்சிகளையும் விஜய்யின் வருகை பாதிக்கும். குறிப்பாக, விசிக, பாமக, அமமுக போன்ற சிறு கட்சிகளை அவர் சிதைப்பார். காரணம், அங்கே நட்சத்திர தலைவர்கள் யாரும் இல்லை. அவர்களின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது ஒரு காரணம்.

மேலும் புதியதாக ஒருவரை ஆதரிப்போமே என்ற மனநிலை வயதானவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதிமுக, திமுக ஆண்ட கட்சிகளைத் தவிர்த்து புதிய முகத்தைத் தேடுவோர் விஜய்யை ஆதரிக்கிறார்கள். அவர்கள் வயதான வாக்காளர்கள். சிலர் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதனால், பாஜகவின் செல்வாக்கும் சிதையும்.

விஜய்யின் கொள்கையில் குழப்பம் உள்ளது. அவரது பேச்சில் குழப்பம் உள்ளது. தேர்தல் அறிக்கையைக் கூட அவர் இன்னும் முறையாக முன்வைக்கவில்லை. அப்படி இருந்தும் மக்கள் அவரை நம்புகின்ற மாதிரியான தோற்றம் உண்டாக்கியுள்ளது. அவர் ''திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள்' என்கிறார். இதைவிட குளறுபடி வேறு இல்லை.

கட்சிக்குள் நிர்வாகத் திறமையான முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. தமிழ்நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே இடத்தில் வைத்து மாவட்டம் தோறும் அவர் அறிமுகப்படுத்தவும் இல்லை. ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குச் சென்று அங்கே வேட்பாளர்களை வாகனத்தில் உடன் நிறுத்தி வாக்கும் அவர் கேட்கவில்லை. பெயர்களைக் கூடச் சொல்வதில்லை. வெறுமனே விசில் சின்னம் என்கிறார்.

இவ்வளவு குற்றங்கள், குறைகள் இருந்தும் விஜய்யின் இமேஜ் பாதிக்கவில்லை என்றே கள ஆய்வுகள் தரும் செய்தியாக உள்ளன. ஏஐ போன்ற பகுப்பாய்வு தொழில்நுட்பக் கருவிகளும் அவரது இமேஜ் உடையவில்லை என்றே சொல்கிறது. காரணம், மாற்றுத் தலைமைக்கு எப்போதும் ஒரு வெற்றிடம் தமிழ்நாட்டில் உள்ளது. அதை நிரப்பும் நட்சத்திர முகம் பல ஆண்டுகளாக இல்லை. அங்கேதான் விஜய் அரைகுறை அரசியல்வாதியாக இருந்தாலும் மக்களுக்குத் தேவைப் படுகிறார்.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வெற்றியின் விளிம்பைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக விஜய் இருப்பார் என்றே கருத்துக்கணிப்புகள் உறுதிசெய்கின்றன.

-கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+