தவெக ஆட்சி அமைக்கும்னு சொன்ன ஆக்சிஸ் மை இந்தியா சர்வே! இதற்கு முன் கணித்தது அப்படியே பலித்ததா?
சென்னை: விஜய்யின் தவெக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று கணித்துள்ள ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் இதுவரை நடத்திய கருத்துக்கணிப்புகளில் எந்தெந்த தேர்தல்களில் எல்லாம் அப்படியே துல்லியமாக பலித்தது? எவையெல்லாம் பலிக்கவில்லை என்ற புள்ளி விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் மாலை எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் தவெக அதிகபட்சம் 26 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி இருந்தனர். ஆனால் ஒரே ஒரு கருத்துக்கணிப்பு மட்டும் அதாவது ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும், விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பை வெளியிட்டது.

துல்லியமாக பலித்ததா?
ஆக்சிஸ் மை இந்தியாவின் இந்த கருத்துக்கணிப்பு முடிவு தமிழகம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தேசிய அளவிலும் கவனம் பெற்றது. இந்த நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு அப்படியே பலிக்கும் என ஒரு தரப்பும், இவர் சொன்ன கருத்துக்கணிப்பு எல்லாம் பலிக்கவே பலிக்காதுப்பா என ஒரு தரப்பும் வாதம் செய்ய தொடங்கியுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா கடந்த 2019 தேர்தலில் இருந்து நடத்திய கருத்துக்கணிப்புகளில் எவையெல்லாம் பலித்தது, எவையெல்லாம் பலிக்கவில்லை என்ற புள்ளி விவரங்களை இங்கு காணலாம்.
2019 லோக்சபா தேர்தல்
* என்.டி.ஏ கூட்டணி 339 முதல் 365 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. இதில் பாஜக 303 இடங்களுக்கு மேல் இருக்கும் என சொல்லியிருந்தது.
* தேர்தல் முடிவு வந்த பிறகு என்.டி.ஏ கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட மிக துல்லியமாகவே இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இருந்தது.
* மற்ற நிறுவனங்கள் எல்லாம் பாஜகவுக்கு மெஜாரிட்டியே கிடைக்காது என்றும், 200 - 270 இடங்கள் தான் கிடைக்கும் என்று சொல்லியிருந்தன. ஆக்சிஸ் மை இந்தியா மட்டுமே இவ்வாறு கூறியிருந்தது. இதனால் அப்போதே இந்த நிறுவனம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. ஆனால் இந்த நிறுவனம் நடத்திய கணிப்பே உண்மையாகி இருந்தது.
2022 பஞ்சாப் சட்டசபை தேர்தல்
76 முதல் 90 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறியது. மற்ற கருத்துக்கணிப்புகள் எல்லாம் தொங்கு சட்டசபையே அமையும் என்று கூறியிருந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின் படியே 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
2023 மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்
காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. ஆக்சிஸ் மை இந்தியா மட்டுமே பாஜக 140 முதல் 162 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்து இருந்தது. தேர்தல் முடிவில் மத்திய பிரதேசத்தில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு அப்படியே பலித்து இருந்தது.
2024 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்
பாஜக கூட்டணி, சிவசேனா கூட்டணி, காங்கிரஸ் + தேசியவாத காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டன. இதில் ஆக்சிஸ் மை இந்தியா கூட்டணி 178 - 200 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று கணித்தது.
மற்ற கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும், காங்கிரசை உள்ளடக்கிய மகா விகாஷ் அகாடி கூட்டணியே வெற்றி பெறும் என கணித்து இருந்தன. ஆனால் தேர்தல் முடிவில் பாஜக கூட்டணியே 235 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதிலும் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு கிட்டத்தட்ட தேர்தல் முடிவை அப்படியே பிரதிபலிப்பதாகவே இருந்துள்ளது.
2025 டெல்லி சட்டசபை தேர்தல்
டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி இருந்த நிலையில், பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் டஃப் ஃபைட் இருக்கும் என்றும் ஆம் ஆத்மி ஜஸ்ட் மிஸ்சில் வெற்றி பெறும், பாஜக மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 15 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியிருந்தனர்.
ஆனால் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பானது பாஜகவே வெற்றி பெறும் என்றும் 45 முதல் 55 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தது. தேர்தல் முடிவில் ஆக்சிஸ் மை இந்தியா சொன்னபடியே பாஜக 48 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மிக துல்லியமாக இந்த முடிவுகள் வந்திருந்தது.
பலிக்காமல் போன கருத்துக்கணிப்பு
2024 லோக்சபா தேர்தல்:
ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் ஆக்சிஸ் மை இந்தியா பாஜக கூட்டணி 360 முதல் 390 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்து இருந்தது. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புப்படி பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், தொகுதிகள் எண்ணிக்கையை பார்க்கும் போது பெரிய வித்தியாசம் இருந்தது.
தேர்தல் முடிவில் 293 தொகுதிகளில் மட்டுமே பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் பவுண்டர் பிரதீப் குப்தா டிவி நிகழ்ச்சியில் லைவில் பங்கேற்றபோது பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அழுதுகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications