மாறன் சகோதரர்களின் ஆசி... சபரீசனிடம் வாழ்த்து... தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தலைவர் பின்னணி..!
சென்னை: தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குறிஞ்சி சிவக்குமார், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார்.
ஈரோட்டை சேர்ந்த குறிஞ்சி சிவக்குமார், ஆரம்பக்காலத்தில் தனது நண்பர் சங்கருடன் இணைந்து கேபிள் தொழிலுக்குள் நுழைந்திருக்கிறார். ஈரோடு திமுகவில் என்.கே.கே.பி.ராஜா ஆதிக்கம் செலுத்திய காலத்தில், துரைமுருகனின் ஆதரவாளராக கட்சியில் வலம்வரத் தொடங்கினார்.

பிறகு கடந்த 2006-ம் ஆண்டு மாறன் சகோதரர்களின் எஸ்.சி.வி. கேபிள் நிறுவனத்துடன் இணைந்து தனது கேபிள் தொழில் சாம்ராஜ்யத்தை வளப்படுத்திக்கொண்டார். ஒருகட்டத்தில் தயாநிதி மாறனின் தீவிர விசுவாசியாகவும் மாறினார்.
கொங்கு பகுதிக்கு தயாநிதிமாறன் வருகிறார் என்றால் கோவை விமான நிலையத்துக்கே சென்று அவரை வரவேற்பது முதல் மீண்டும் சென்னைக்கு வழியனுப்பும் வரை உடனிருப்பார். இப்படிப்பட்ட குறிஞ்சி சிவக்குமாருக்கு மாறன் சகோதரர்களின் சிபாரிசாலும், துரைமுருகனின் பரிந்துரையின் பேரிலும் கடந்த 2016-ம் ஆண்டு பவானி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணினிடம் வெற்றியை பறிகொடுத்தார் குறிஞ்சி சிவக்குமார். கடந்த தேர்தலில் உட்கட்சி கோஷ்டிகளால் தமது வெற்றிவாய்ப்பு பறிபோனதால், இந்த முறை அதுபோன்று நடந்துவிடக்கூடாது என்பதற்காக கட்சியில் உள்ள அனைத்து தரப்பையும் அனுசரித்து செல்லத் தொடங்கினார்.
இதனிடையே பவானி தொகுதி வேட்பாளராக துரைராஜ் என்பவரை திமுக தலைமை நிறுத்தியதால், ஆட்சி அமைந்த பிறகு வாரியத் தலைவர் பதவிகளில் ஒன்றை பெற்று விடவேண்டும் என்ற நோக்கில் சென்னைக்கு படையெடுக்கத் தொடங்கினார் குறிஞ்சி சிவக்குமார்.
ஆரம்பம்காலம் முதலான துரைமுருகனின் தொடர்பு, தயாநிதி மாறனின் சிபாரிசு, சபரீசனின் வாழ்த்து என எல்லாம் ஒன்று சேர குறிஞ்சி சிவக்குமாருக்கு தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தலைவர் என்ற ஜாக்பாட் கிடைத்துள்ளது.
கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் தலைவராக இதற்கு முன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார்.
இப்போது பதவியேற்கவுள்ள குறிஞ்சி சிவக்குமார் தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications