அண்ணனுக்கு பிறந்தநாள் கொண்டாடி பவரை இழந்த இல.கணேசன்! கூடுதல் அதிகாரம் பறிபோன பின்னணி!
சென்னை: அண்ணனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடி தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கூடுதல் அதிகாரத்தை பறிகொடுத்திருக்கிறார் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன்.
மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அம்மாநிலத்துக்கு ஆனந்த் போஸ் என்பவரை புதிய ஆளுநராக நேற்றிரவு நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர்.
இல.கணேசன் தனது அண்ணன் சதாபிஷேக விழாவுக்கு மம்தா பானர்ஜியை அழைத்து முன்னிலைப்படுத்தியதை டெல்லி மேலிடம் ரசிக்கவில்லை எனத் தெரிகிறது.

இல.கணேசன்
சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஆழமாக கடைபிடித்து வரும் இல.கணேசன், அரசியல் பொதுவாழ்வு காரணமாக திருமணம் கூட செய்து கொள்ளாமல் அண்ணன் குடும்பத்தினருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். தனது அண்ணன் கோபாலனின் 80வது பிறந்தநாளை கடந்த 3ஆம் தேதி சென்னையில் வெகு விமரிசையாக நடத்தினார் இல.கணேசன். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை அழைத்து வந்து விழாவில் முன்னிலைப்படுத்தினார்.

ஏழாம் பொருத்தம்
ஏற்கனவே மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வரும் சூழலில் இல.கணேசனின் இந்த நடவடிக்கை டெல்லிக்கு அதிருப்தியை அளித்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இல.கணேசனுக்கு முன்னர் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர் மம்தாவுக்கு இணையாக நிர்வாக முடிவுகளில் தலையிட்டு அவருக்கு குடைச்சல் கொடுத்து வந்தார். ஆனால் மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராக இருந்த இல.கணேசன் மம்தாவுடன் சுமூகமான உறவை கையாண்டார்.

டெல்லி அதிருப்தி
மொத்தத்தில் இல.கணேசனின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த டெல்லி தலைமை, தற்போது அவரை கூடுதல் பொறுப்பிலிருந்து விடுவித்து மேற்கு வங்க மாநில ஆளுநராக ஆனந்த் போஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் நேற்றிரவு வெளியிட்டுள்ளார். இதனால் இனி மணிப்பூர் மாநில ஆளுநராக மட்டும் இல.கணேசன் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்புறவு
இல.கணேசனை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றாலும் கூட அனைத்து தரப்பினருடனும் நட்புறவுடன் செயல்பட வேண்டும் என எண்ணுபவர். இல.கணேசனின் பிறந்தநாள் ஒன்றுக்கு கருணாநிதியே அவரது வீடு தேடிச் சென்று வாழ்த்துக் கூறியிருக்கிறார் என்றால் அவர் மீது கருணாநிதிக்கு எவ்வளவு மதிப்பு இருந்திருக்கூடும் என்பது புரிகிறது. அந்தளவு எல்லா தரப்புடனும் இணைந்து செயலாற்றக்கூடியவர் இல.கணேசன் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications