3வது சீசனாக சொதப்பல்.. சிஎஸ்கே கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறாரா ருதுராஜ் கெய்க்வாட்?
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றது முதல் 3 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறவில்லை. இதனால் அடுத்த சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாட் ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது. தோனிக்கு பின் சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றது முதல், கடந்த 3 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

இதனால், அடுத்த சீசனுக்கு முன்பாக ருதுராஜ் கெய்க்வாட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. நடப்பு 2026 சீசனில் சென்னை அணியின் தோல்விகளுக்கு ருதுராஜின் மோசமான பேட்டிங் ஃபார்ம் மற்றும் கேப்டன்சி முடிவுகளே முக்கியக் காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ், வெறும் 120-க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக, ஹைதராபாத் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் அவர் 21 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ருதுராஜ் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்.. எதிர்பார்த்த அளவு ரன்களோ, வேகமோ அவரிடம் இல்லை என வெளிப்படையாக விமர்சித்தார். தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும், தோனிக்கு பிறகு சிஎஸ்கே போன்ற பெரிய அணியை வழிநடத்தும் அழுத்தம், ருதுராஜின் இயல்பான பேட்டிங்கை பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்விகளால் சிஎஸ்கே நிர்வாகம் கேப்டன்சி மாற்றத்தைப் பற்றி தீவிரமாக யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனில் சென்னை அணியில் இணைந்து சிறப்பாக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், அடுத்த சீசனில் சிஎஸ்கே-வின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணியை ஏற்கனவே வழிநடத்திய அனுபவம் சஞ்சுவுக்கு இருப்பது கூடுதல் பலம். தோனி உருவாக்கிய மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை, அவரது நிழலிலிருந்து வெளியேறித் தனித்துவமாக வழிநடத்த ருதுராஜ் தடுமாறி வருவதால், அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் மாற்றம் உட்பட பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த பின் ருதுராஜ் கெய்க்வாட்டின் உடல்மொழியில் சில மாற்றங்கள் தென்பட்டது. இதனால் கேப்டன்சியை ராஜினாமா செய்வார் என்றும் சில கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இதனால் சிஎஸ்கே அணி புதிய மாற்றத்திற்கு தயாராகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications