சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மொத்தம் 419 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் 47 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 ஆம் துவங்கி, கடந்த 6 ஆம் தேதி வரை நடந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட மொத்தம், 7,599 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பல வேட்பாளர்கள், தங்கள் பெயரில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, 7 ஆம் தேதி நடந்தது. மொத்தமாக, 4,645 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற, நேற்று மாலை 3 மணி வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்டோர், தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் இருந்து 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரசீலனைக்குப் பிறகு இரவு 11.59 மணி நிலவரப்படி, 4,618 மனுக்கள் ஏற்கப்பட்டு, 2,460 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 521 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தன. இறுதியில் 4,630 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுதும், திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் கோரிய இடங்களில், தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இறுதிப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் அச்சிடும் பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 616 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில், 173 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 24 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டசபை தொகுதியில் 47 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக சைதாப்பேட்டை தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் களமிறங்கும் கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 2 பேர் மனுவைத் திரும்பப் பெற்றுள்ளனர். பெரம்பூர் தொகுதியில் 47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 2 பேர் திரும்பப் பெற்றுள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 2 பேர் திரும்பப் பெற்றுள்ளனர். வில்லிவாக்கத்தில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 2 பேர் திரும்பப் பெற்றுள்ளனர்.
திரு.வி.க. நகர் தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, யாரும் மனுவைத் திரும்பப் பெறவில்லை. எழும்பூர் தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, ஒருவர் திரும்பப் பெற்றுள்ளார்.
ராயபுரத்தில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 2 பேர் திரும்பப் பெற்றுள்ளனர். துறைமுகம் தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 2 பேர் திரும்பப் பெற்றுள்ளனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, யாரும் திரும்பப் பெறவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, யாரும் திரும்பப் பெறவில்லை.
அண்ணா நகரில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, யாரும் திரும்பப் பெறவில்லை. விருகம்பாக்கம் தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, ஒருவர் திரும்பப் பெற்றுள்ளார்.
சைதாப்பேட்டையில் 15 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 6 பேர் திரும்பப் பெற்றுள்ளனர். தியாகராய நகரில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, ஒருவர் திரும்பப் பெற்றுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 2 பேர் திரும்பப் பெற்றுள்ளனர். வேளச்சேரி தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, ஒருவர் திரும்பப் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications