மாட்டிறைச்சி கடையை மூடுங்க.. சென்னையில் இந்து அமைப்பினர் அராஜகம்.. இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பு!
சென்னை: திருவொற்றியூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கடைகளை நள்ளிரவில் மூட சொல்லி பாரத் இந்து முன்னணி நிர்வாகி சிவாஜி அராஜகம் செய்துள்ளார். அப்போது மாட்டிறைச்சி கடை வியாபாரிகளுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்த இஸ்லாமியர்கள், மாட்டிறைச்சி வெட்டக் கூடாதுனு யார் சொன்னது என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் வட மாநிலங்களில் மாட்டிறைச்சி கொண்டு செல்வோர் மீதான தாக்குதல் அதிகரித்தன. அதேபோல் மாட்டிறைச்சி கடைகளுக்கு மிரட்டல் விடுப்பதும் அதிகரித்தன. இதற்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் அரங்கேறி இருக்கிறது.

சென்னை திருவொற்றியூரில் பல ஆண்டுகளாக மாட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை நள்ளிரவில் மூட சொல்லி பாரத் இந்து முன்னணி நிர்வாகி சிவாஜி தனது சில ஆதரவாளர்களுடன் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வியாபாரிகளுக்கு ஆதரவாக அங்கிருந்த இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் சிவாஜி தரப்புக்கும் இஸ்லாமியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சிவாஜியிடம் நேரடியாகவே இஸ்லாமியர்கள், எந்த ஊரு நீ.. காலங்காலமா மாட்டிறைச்சி வெட்டுறாங்க.. இதுவரை ஒருத்தரும் வந்து கேட்டதில்லை.. மாடு வெட்ட கூடாதுனு யாரு சட்டம் போட்டது.. நீ ஏதாவது அரசுத் துறையில் அதிகாரியா இருக்கியா? யார் வெட்டக் கூடாதுனு முதல்ல சொல்லு.. மாட்டிறைச்சி வெட்டினால் என்ன செய்வீங்க.. என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.
அந்த நேரத்தில் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சூழலை அறிந்த பாரத் இந்து முன்னணி நிர்வாகி சிவாஜி தனது ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
