எல்.ஆர். ஈஸ்வரிக்கு முன்பே கிளப் சாங்ஸில் கலக்கிய ஜமுனா ராணி! ஸ்டுடியோவில் கண்ணதாசன் வைத்த பந்தயம்
சென்னை: ஜமுனா ராணி, தமிழ் திரையிசையின் பொற்காலத்தை தன்னுடைய கம்பீரமான தேன்குரலால் கட்டிப்போட்ட பாடகி.. மெல்லிசையா? துள்ளலிசையா? எந்த பாடலாக இருந்தாலும் தன் அலாதியான உச்சரிப்பால் ரசிகர்களின் நெஞ்சில் அப்படியே பதியவைத்துவிடும் வல்லமை பெற்றவர் ஜமுனாராணி.. எத்தனையோ இசைக்காவியங்களை தமிழக ரசிகர்களுக்காக அள்ளித்தந்தவர் ஜமுனாராணி..!!
அன்றைய காலகட்டத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், பி.சுசீலா, ஜிக்கி, லீலா போன்ற ஜாம்பவான் பாடகிகள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தனர்.. இவர்கள் அத்தனை பேருக்கும் சவால்வடும் விதமாக, தன்னுடைய தனித்த குரலால் புயலென நுழைந்தார் ஜமுனா ராணி..

ஜமுனா ராணி பாடகி
ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டாலும், சுத்தமான தமிழில் பாடக்கூடிய வல்லமை பெற்றிருந்தார் ஜமுனா.. குழந்தை பருவத்திலேயே தெலுங்குப் படங்களில் பாடியிருக்கிறார்.. அதற்கு பிறகுதான் தமிழில் பாட வந்தார்.. இவர் பாடிய முதல் பாட்டு, "சக்சஸ், சக்சஸ் " என்பதாகும்..
எப்படி பராசக்தி படத்தில் சிவாஜிகணேசனுக்கு முதல் வசனம் சக்சஸ் சக்சஸ் என அமைந்ததோ, அதுபோலவே ஜமுனா ராணிக்கும் முதல் பாடலே சக்சஸ்.. சக்சஸ் என்றே அமைந்தது. அதற்கு பிறகு மளமளவென பாட வாய்ப்புகள் குவிந்தன..
ருக்மணிக்காக
உணர்ச்சிகளை அத்தனை துல்லியமாக தன் குரலில் வெளிப்படுத்துவார். இதற்கு உதாரணமாக 'புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்' பாடலை சொல்லலாம்.. சரணம் முடிந்து பி. சுசீலா மென்மையாக பாட்டை தொடங்க, உடனே ஜமுனா ராணி "ருக்மிணிக்காக" என்று பாடும் அந்த ஒரு வார்த்தையிலேயே மொத்தப் பாடலின் ஜீவனும் அடங்கியிருக்கும்..
தன் கணவனை இன்னொரு பெண்ணுக்கு விட்டுத்தர முடியாத உரிமையும், கோபமும் வெளிப்படும். அந்த ஒரு பாடலின் மொத்த உயிரையும், அந்த ஒரே வார்த்தையில் அழுத்தமான உச்சரிப்பார் ஜமுனாராணி.
பந்தயம் கட்டிய கண்ணதாசன்
ஜமுனா ராணி பாடினாலே அந்த பாட்டு ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கையும் தயாரிப்பாளர்களுக்கு அன்று இருந்தது.. அதற்கு காரணம், "காமுகர் நெஞ்சில் நீதியில்லை'" என்ற பாடலை சொல்லலாம்..
இந்த பாட்டை ஜமுனா ராணிதான் பாட வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றாராம் கண்ணதாசன்.. ஆனால், இதில் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்திக்கு துளியும் விருப்பமே இல்லையாம். அதனால் ஜமுனா ராணியை பாட வைக்க தயங்கியிருக்கிறார்கள்.
உடனே கண்ணதாசன், இந்தப் பாட்டை ஜமுனா பாடியும், அது நன்றாக வராவிட்டால் இன்றைய செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்.,.. ஒருவேளை நன்றாக அமைந்துவிட்டால் ஜமுனாவுக்கு சம்பளத்தை டபுளாக்கி தர வேண்டும் என்று பந்தயம் கட்டினாராம். இதற்கு மெல்லிசை மன்னர்களும் ஒப்புக்கொண்டு, ஜமுனாவை பாட வைத்துள்ளனர்..
கடைசியில் பாடல் சூப்பராக அமைந்து ஹிட்டடித்து.. ஜமுனாவுக்கும் சம்பளம் டபுளானது.. இதே மெல்லிசை மன்னர்கள் ஏராளமான பாடல்களை ஜமுனா ராணிக்கு தந்தார்கள்.. பல பாடல் வாய்ப்புகளும் வரிசை கட்டி நின்றன.
கவர்ச்சி குரல் - வில்லி குரல்
ஜமுனா ராணி அவருடைய குரலில் ஒரு கவர்ச்சி இருந்தது.. டிஎம்எஸ்ஸூடன் இணைந்து ஜமுனா ராணி பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்.. 4 வயதில் சங்கீதப் போட்டியில் முதல் பரிசு பெற்றதுடன், 5 வயதில் வானொலிக்காக தேர்வு செய்யப்பட்டவர் ஜமுனாராணி..
டான்ஸ் என்றால் ஜமுனா ராணிக்கு மிகவும் பிடிக்குமாம்.. முறைப்படி பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்... ஒரு டான்ஸராகத்தான் சினிமாவில் முதலில் அறிமுகமாகியிருக்கிறார்.. அதற்கு பிறகுதான் பாடகியாக வலம்வந்தார்.. சிங்கள சினிமாவிலும் முன்னணி பாடகியாக வலம்வந்தார் இந்த பின்னணி பாடகி..
கிளப் டான்ஸ்
மேற்கத்திய பாணி + கிராமிய பாணி என இரண்டுமே கலந்த குரல்தான் ஜமுனா ராணியுடையது.. கிளப் டான்ஸ் என்றாலே அது ஜமுனாராணி என்று இசையுலகில் பதிந்து போயிற்று.. இதற்கு பிறகுதான் அதுபோன்ற பாடல்களை எல்.ஆர்.ஈஸ்வரி பாட ஆரம்பித்தார்.
அதேபோல வில்லிகளுக்கான பாடல்கள் என்றாலே, கூப்பிடுங்கள் ஜமுனா ராணியை என்பார்களாம்.. அந்தவகையில், குலேபகாவலி" படத்தில் ராஜசுலோசனாவுக்காக, "ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா" என்ற பாடல் அன்று பட்டிதொட்டியெங்கும் பிரபலம். எஸ்.ஜானகி குழந்தை பாடல்களுக்கு முன்பே அந்த மழலை குரலை முதலில் விதைத்தது ஜமுனா ராணி தான்.
மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா என்ற பாடல் முதல், ஆதி மனிதன் காதலுக்குப் பின் என்று ஆரம்பித்து, நான் சிரித்தால் தீபாவளி வரை.. ஜமுனா ராணியின் பாடல்கள் ஒவ்வொன்றையும் தமிழக மக்களால் மறக்க முடியாது.
கிராமபோன் சகாப்தத்தின் அசைக்க முடியாத குரலாக விளங்கிய ஜமுனா ராணியின் இனிமையான குரல், தமிழ்த் திரையிசை வரலாற்றில் என்றென்றும் காலத்தால் அழியாத தங்க அத்தியாயம்...!!!


Click it and Unblock the Notifications
