இயக்குநர் பாரதிராஜா நலமாக உள்ளார்.. உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் - குடும்பத்தினர் தகவல்
சென்னை: இயக்குநர் பாரதிராஜா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும், உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் பாரதிராஜா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
'16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதி ராஜா. அவரது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து இயக்கினார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கிய பாரதிராஜா ராதிகா, ராதா, கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்தவர்.

முதல் மரியாதை, கிழக்கே போகும் ரெயில், அலைகள் ஒய்வதில்லை உட்பட பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். நகரத்து ஸ்டூடியோக்களில் கிடந்த சினிமாவை கிராமங்களில் நிறுத்தியவர் என்ற பெருமையும் பாரதிராஜாவுக்கு உண்டு. அவரது மண்வாசனை மிகுந்த படங்களும், கலை ரசனைக்கும் ரசிகர்கள் அதிகம். இயக்குநராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். அவரது இறப்பு பாராதிராஜாவிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது மட்டுமின்றி அவரை மீளமுடியாத சோகத்தில் ஆழ்த்தியது. அப்போது முதல் மிகவும் சோர்வாக காணப்பட்ட பாரதிராஜா கடந்த ஒரு சில மாதங்களாக தனது மகளின் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
மலேசியாவில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிலிருந்து கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாரதிராஜா உடல்நிலை குறித்து சமூக வலைதங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், பாரதிராஜா குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது குடும்பத்தினரின் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications