லாட்ஜில் பெண்ணுக்கு பகீர்.. இனி சென்னை விடுதிகளில் தங்குவோர் அறை எடுக்க இது இருந்தால் மட்டுமே அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் கொலை, தற்கொலை மற்றும் போதைப்பொருள் பதுக்கல் போன்ற தொடர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, விடுதி உரிமையாளர்களுக்கு சென்னை காவல்துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி அடையாள அட்டை விபரங்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கத் தவறினால் விடுதி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெரியமேடு விடுதியில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது. இதையடுத்து, அறை தேடி வருபவர்களின் விபரங்களைச் சேகரிப்பதில் இனி எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Chennai News Chennai Police Hotel Rules Safety First Chennai Lodge Mandatory ID Crime Prevention Tamil Nadu News Travel Alert Chennai Periamet Incident Hotel Guest Safety Police Inspection Chennai

சென்னை லாட்ஜில் கொடுமை

சென்னை மாநகரின் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தனியார் தங்கும் விடுதிகளில் தங்குவோரின் பின்னணியை ஆய்வு செய்ய சிறப்பு நடைமுறைகளை காவல்துறை அமல்படுத்தியுள்ளது.

அந்தவகையில், விடுதிகளில் தங்குபவர்களின் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் போன்ற விபரங்களை முறையாகப் பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்தப் பதிவேடுகளை போலீசார் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளில் தங்குவோருக்கு புதிய ரூல்

குறிப்பாக இரண்டு நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் நபர்கள் மீதோ அல்லது வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கியிருப்பவர்கள் மீதோ சந்தேகம் எழுந்தால், தாமதிக்காமல் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதி அறைகள் குற்ற செயல்களுக்கான புகலிடமாக மாறுவதைத் தடுக்க, தங்குபவர்களிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு விடுதி நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் நடக்கும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம் என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சென்னை விடுதிகள்

இதன் மூலம் சென்னையில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளும் இனி காவல்துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

சமீபத்தில் நடந்த பெரியமேடு கொலை சம்பவம் ஒட்டுமொத்த சென்னை போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பவ்யா என்ற இளம்பெண் தங்கியிருந்த அதே விடுதி அறையில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்ததும், அவருடன் இருந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதும் பெரும் கேள்விகளை எழுப்பியது.

இது போன்ற சம்பவங்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்கதையாகி வரும் நிலையில், இனி யார் விடுதியில் அறை கேட்டாலும் அவர்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அனுமதி வழங்கக் கூடாது என்பதில் போலீசார் மிகத் தீவிரமாக உள்ளனர்.

போலீசார் கிடுக்கிப்பிடி

குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை நிமித்தமாகவும், தனிப்பட்ட தேவைகளுக்காகவும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் விடுதிகளையே அதிகம் நாடுகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் விடுதிகளைத் தங்கள் பாதுகாப்பான மறைவிடமாக மாற்றிக் கொள்கின்றனர். இதனை வேரோடு அறுக்கவே, விடுதி உரிமையாளர்கள் ஒவ்வொரு விருந்தினரின் அடையாள அட்டையை நகல் எடுப்பதோடு, அவர்களின் மொபைல் எண்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் அபாயகரமான போதை ஊசிகள் போன்றவற்றை விடுதி அறைகளில் பதுக்கி வைப்பவர்கள் குறித்து ரகசியத் தகவல் வழங்கவும் காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. விடுதி ஊழியர்களுக்கும் தங்கும் நபர்களின் அசைவுகள் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் விடுதி உரிமையாளர்கள் மத்தியில் சில நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தினாலும், பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். வரும் நாட்களில் விடுதிகளில் திடீர் சோதனைகள் நடத்தவும், விதிகளை மீறும் விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்யவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+