வந்துட்டாரு பிக்பாஸ்..பிக் பாஸ் தமிழ் சீசன் 9 எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..அவரே தானா?
சென்னை: ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாகவும், அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே விஜய் டிவி தான் என்பார்கள் ரசிகர்கள். அந்த தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம். அதே நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்றது.
முதல் சீசனைப் போலவே அடுத்தடுத்து எட்டு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. அதில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் திரையுலகிலும், அரசியல் உலகிலும் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் 9 சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," விஜய் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் தனது ஒன்பதாவது சீசனுடன் விரைவில் திரையுலக ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, 2017ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தொடர்ந்து பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9
100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வெல்லுகிறார். இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்-லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, சித்தப்பா சரவணனின் வெளியேற்றம், தாடி பாலாஜி சம்பவம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ளன.
விஜய் சேதுபதி
முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். வரவிருக்கும் ஒன்பதாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.
பிக் பாஸ் அறிவிப்பு
இதுதொடர்பாக பேசியுள்ள ஜியோஸ்டாரைச் சேர்ந்த கிருஷ்ணன் குட்டி," "இந்த முறை சில சமூக ஊடக பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்னர் நெல்சன் பிரதீப் குமார், அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற பிரபல இயக்குநர்கள் நிகழ்ச்சியை இயக்கிய நிலையில், இந்த சீசனை பிரவீன் மற்றும் அர்ஜூன் இயக்க உள்ளனர். மேலும், ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்கள், நேரடியாக போட்டியாளர்கள் குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.
பிக் பாஸ் புதுமை
முதல் சீசனில் இருந்து எட்டாவது சீசன் வரை ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு புதுமைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் என்ன புதுமை இருக்கப் போகிறது? யார் யார்? கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications