தாய்மொழி பீகாரி..ஆனால் தமிழ்ல 93 மார்க்! பிரம்மிக்க வைத்த பீகார் மாணவி! கைகொடுத்த மதிய உணவு திட்டம்!
சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்து நேற்று முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் பீகார் மாணவி தமிழில் நூற்றுக்கு 93 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். சென்னையில் போலீஸ் பஜார் மேல்நிலைப் பள்ளியில் படித்த அவர் 500க்கு 467 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். 10க்கும் 10 வீட்டில் ஒரே குடும்பமாக வசித்து வரும் நிலையில், படிப்பில் சாதனை படைத்துள்ளார் அவர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் மாநில பாடத் திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்நிலையில் விடைத் தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் நேற்று வெளியானது. அதன்படி தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம் ஆகும். 10ம் வகுப்பில் மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவியர் தேர்ச்சி விகிதம் 4.14 சதவீதம் அதிகரித்துள்ளது.

வழக்கம்போல இந்த தேர்விலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழிப் பாடத்தில் 8 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். கவனிக்கத்தக்க வகையில் சென்னையில் தமிழக அரசு பள்ளியில் படித்த, பீஹார் மாணவி ஜியா குமாரி தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சென்னை பல்லாவரம் கவுல் பஜார் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜியா, மொத்தம் 500 மதிப்பெண்களில் 467 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஜியாவின் பெற்றோர் பீஹாரில் இருந்து 17 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்தனர். தந்தை தனஞ்சய் திவாரி, கட்டிட வேலை செய்கிறார். மாதம் பத்தாயிரம் மட்டுமே அவர் சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. 10க்கும் 10 அறையில் ஒரு குடும்பமே வசிக்கிறது. கூலி வேலை செய்ய தனஞ்செய் பீகாரில் இருந்து கிளம்பிய நிலையில் நிலையில், தமிழ் நாடு அரசு பள்ளிகள் சிறந்த கல்வி தருவதாக அறிந்த பின், அவர் குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்.
ஜியா தமிழ் மொழியைத் தனது பள்ளி நண்பர்களுடன் பேசியும், ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாக சொல்கிறார். "தமிழ், இந்தி மொழியை விட சிரமமானது. ஆனால் புரிந்துகொள்வதற்கு தொடங்கியவுடன் எளிதாகி விட்டது. இங்கு அனைவரும் தமிழில் பேசினர். அவர்களுடன் நானும் தமிழில் பேசினேன். நீங்கள் எங்கு வாழ்கிறீர்களோ, அங்குள்ள மொழியை அறிந்து கொள்ள வேண்டும்" என்கிறார் ஜியா.
ஜியா தற்போது பல்லாவரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த பின்பு தனது உயர்கல்வியைத் தொடர திட்டமிட்டுள்ளார். ஜியா, நீட் தேர்வுக்குத் தயாராகும் நோக்கில் உயிரியல் மற்றும் கணிதப் பிரிவை தேர்வு செய்ய உள்ளார். அவரின் மூத்த சகோதரி ரியா குமாரி கணினி அறிவியலுடன் கணிதம் படித்து JEE தேர்வை எழுத திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியின் மதிய உணவுத் திட்டம், இலவச யூனிபார்ம்கள், புத்தகங்கள், காலணிகள் ஆகியவையால் தனது குடும்பம் பொருளாதார சுமையிலிருந்து விடுபட்டு, கல்வியில் முன்னேறியுள்ளது என்கிறார்கள் உணர்வுப்பூர்வமாக.
ஜியாவின் தமிழ் ஆசிரியர் கீதா பேசும் போது "தமிழ் பேசும் விதத்தைப் பார்க்கும் போது ஜியா பீஹாரைச் சேர்ந்தவர் என்று யாருமெ சொல்ல முடியாது. தமிழ் இலக்கணம், இலக்கியம், கவிதை, கட்டுரை எழுதுவதில் அவர் தேர்ச்சி பெற்றவர்" என சிலாகித்து பேசினார்.
ஜியாவின் குடும்பத்தில் மற்றொரு சிறப்பு, அவரது சகோதரிகளான ரியா மற்றும் சுப்ரியா குமாரியும் தமிழில் சிறந்த பேச்சாளர்களைப் போல பேசுகின்றனர். எங்கள் வீட்டில் பெரும்பாலும் தமிழில் தான் பேசுவோம். கடைகளிலும் தமிழில் தான் பேசுவோம். அது எங்கள் தினசரி வாழ்வின் ஓர் பகுதியாகி விட்டது என்கிறார் ரியா. ஜியாவின் தந்தை தனஞ்சய் திவாரி, அவரது மகள்களின் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், என் மூன்று குழந்தைகளும் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே என் ஆசை," என அவர் உருக்கமாக கூறினார்.












Click it and Unblock the Notifications