பாமக+அமமுக+ ஓபிஎஸ்.. அண்ணாமலை கணக்கு.. கூட்டிகழிச்சு பார்த்தால், தப்புமா.. அல்லது தப்பாகுமா?
சென்னை: கடைசியில் பாஜக கூட்டணியில் பாமகவும் இணைந்துவிட்டது.. கடந்த 2014 பாணியில் அதிமுகவிற்கு எதிராக பிரம்மாண்ட கூட்டணியை எப்படி பாஜக அமைத்ததோ அதுபோல் இப்போது பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளது. அப்போது தமிழகத்தில் அசுர பலத்தில் அதிமுக இருந்தது. அனால் இப்போது இந்திய அளவில் அசுர பலத்தில் பாஜக இருக்கிறது.
பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக விலகிய நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழக்கத்தை விட அதிரடியாக செயல்பட்டு அதிமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். திமுக கூட்டணியில் பணபலம் மிகுந்த ஐஜேகே கட்சியை தன் கூட்டணிக்கு இழுத்தார் அண்ணாமலை.

அடுத்ததாக அதிமுக கூட்டணியில் இருந்த புதிய நீதி கட்சி, அதிமுகவில் இருந்து பிரிந்த ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து பிரிந்து தனி கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன் (அமமுக), தமிழக வெற்றி கழகம் (ஜான் பாண்டியன்), தமிழ்மாநில காங்கிரஸ் உளளிட்ட மொத்தமாக பாஜக பக்கம் இழுத்தது.
அடுத்ததாக பாமகவையும் தன் பக்கம் இழுத்துவிட்டது பாஜக. பாமக பாஜக கூட்டணியில் இணைய அண்ணாமலை தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதிமுக உடன் சேர இருந்த பாமகவை, கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பாஜக பக்கம் கொண்டு வந்ததில் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பாஜக எப்படி மற்ற மாநிலங்களில் வளர்ந்தது என்றால், தன்னுடன் கூட்டணி அமைத்த பிரதான கட்சியையே ஒரு கட்டத்தில் ஓவர் டேக் செய்து, அவர்களை விடவும் வளர்வது வாடிக்கை.. அந்த வகையில் தன்னுடன் கூட்டணியில் இருந்த தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுகவின் வாக்குவங்கியை அப்படியே தன் பக்கம் இழுத்து பெரிய கட்சியாக தமிழகத்தில் உருவெடுக்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அந்த முயற்சி தான் இன்றைய பிரம்மாண்ட கூட்டணி என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்..
ஜெயலலிதா இல்லாத அதிமுகவில், ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இல்லை.. டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்களும் இல்லை.. அதிமுக கடந்த 2016ல் தென்மாவட்டங்களில் தோற்க அமமுக முக்கிய காரணமாக இருந்தது. இந்த சூழலில் அதிமுகவை காலி செய்து இரண்டாவது இடத்திற்கு வரும் பாஜகவின் முயற்சி இந்த தேர்தலில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாஜக முன்பை விட தமிழகத்தில் வளர்ந்துள்ளதாக கூறப்படுவதால் அந்த கட்சிக்கு 4 முதல் 6 சதவீதம் வாக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் பாமகவிற்கு 4 முதல் 5 சதவீதமும், டிடிவி தினகரனின் அமமுகவிற்கு 5 சதவீதம்,, ஓபிஎஸ் அணி + வாசனின தமாகா+ ஜான் பாண்டியனின் வெற்றிக்கழகம் + கொங்கு அமைப்பு + தேமுதிகவையும் இணைத்தால் கணிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பாஜக ஆதரவாளர்கள நம்புகிறார்கள்..
2014ல் இரண்டு தொகுதிகளை கைப்பற்றிய பாஜக கூட்டணி, இந்த முறை ஐந்து தொகுதிகளில் வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக கோவை, தேனி, கன்னியாகுமரி, தென் சென்னை, நெல்லை உள்ளிட்ட தொகுதிகளை வெல்ல பெரிய அளவில் வேலை செய்து வருகிறது.
இந்த ஐந்து தொகுதிகளில் பாஜக கூட்டணி திமுகவிற்கு சவாலாக இருக்கும் என்று பாஜக ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதேபோல் 2014ல் எப்படி கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு திமுகவிற்கு ஏற்பட்டதோ, அதுபோல் அதிமுகவிற்கு இப்போது ஏற்படும் என்றும் சொல்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள். அண்ணாமலையின் இந்த கணக்கு தப்புமா அல்லது தப்பாகுமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications