நிறுத்திக்கோங்க.. அதிமுகவுக்கு ‘வார்னிங்’ கொடுத்த அமர் பிரசாத்! ‘ஷா’ சொல்லியும் ஓயாத வார்த்தைப்போர்!
சென்னை : அதிமுக - பாஜக இடையே நிகழ்ந்து வந்த கருத்து மோதல்கள், அமித் ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்து பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி போட்ட ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததில் இருந்தே பாஜக - அதிமுக இடையே கருத்து மோதல்கள் தீவிரமடையத் தொடங்கின. பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து அதிமுகவுக்கு தாவியதால் பாஜக மாநில தலைமை அப்செட் ஆனது. அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் மாநில தலைவர் பதவியையே ராஜினாமா செய்வேன் என்றார் அண்ணாமலை.

அதிமுக பாஜக மோதல் : பதிலுக்கு அதிமுகவினரும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை உண்டானது. ஆனால், அதிமுக கூட்டணி தொடர்வதாக அமித் ஷா கூறியதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனையில் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது இரு தரப்பினரும் மாறி மாறி சீண்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கூட்டணி பற்றி அண்ணாமலை பேசி வருவது பற்றி கேள்வி வந்தபோது, அண்ணாமலை பற்றி எங்களுக்கு கவலையில்லை, நாங்கள் டெல்லி தலைமையுடன் தான் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்துவோம், முதிர்ச்சியற்ற தலைவரை பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்று ஆக்ரோஷமாக பேசினார் எடப்பாடி பழனிசாமி.

டெல்லியில் சமரசம் : இந்நிலையில் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அண்மையில் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் உடனிருந்தனர்.
அதிமுக - பாஜக இடையிலான மோதல் தொடர் கதையாகி வந்த நிலையில், டெல்லியில் அமித் ஷா அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைத்ததாக தகவல் வெளியானது. டெல்லி சென்று வந்ததும் எங்களுக்குள் பிரச்சனை எதுவும் இல்லை என்று தெரிவித்தார். அதேபோல அண்ணாமலையும், எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்த தகராறும் இல்லை என்றார்.
வெட்டவெளிச்சம் : ஆனால், இந்த நிலை நிரந்தரமில்லை என்பது அடுத்த ஓரிரு நாட்களிலேயே வெட்டவெளிச்சமாகியுள்ளது. பாஜக மாநில பொருளாளர் எஸ். ஆர்.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைகளுடன் நடந்த கூட்டம். தமிழ்நாட்டில் எந்த முடிவையும் அண்ணாமலையே எடுப்பார் என்றும் அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் உணர்த்தியிருப்பதாகக் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக நிர்வாகிகள் அதிமுக குறித்து விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பாஜக வினையாற்றினால் எதிர்வினையாற்ற அதிமுக தயாராக இருக்கிறது. இதெல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா? சொல்லாமல் நடக்கிறதா? இதை அண்ணாமலை தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
பொங்கி எழுந்த அமர் பிரசாத் : அண்ணாமலை என் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும். இனிமேல் இதுபோன்ற கருத்துகள் பாஜக தரப்பில் இருந்து வராது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எங்கள் கட்சியினரை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்று அவர் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு செய்யாவிட்டால், கட்சி அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம் என்று ஜெயக்குமார் சீறினார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு பற்றி ட்வீட் செய்துள்ள பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்கள் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நாங்களும் பேசுவோம்" என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications