1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?
சென்னை: தொகுதி பங்கீடுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் சாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ள நிலையில், இன்று காலை 1 மணி ப்ளைட்டில் பாஜக நயினார் நாகேந்திரன், பாமக அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. தினகரன் ஆகியோர் டெல்லிக்கு விரைகின்றனர்.
"தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவோம்" என்று எடப்பாடி தரப்பு எவ்வளவோ மார்தட்டிப் பார்த்தது. ஆனால், தற்போதைய சூழலைப் பார்த்தால், 'ரிமோட் கண்ட்ரோல்' முழுக்க முழுக்க அமித்ஷாவின் கைகளில் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதையடுத்தே தற்போது பாஜக நயினார் நாகேந்திரன், பாமக அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. தினகரன் ஆகியோர் டெல்லிக்கு விரைகின்றனர்.

அமித்ஷாவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் டெல்லிக்கு செல்கின்றனர். டெல்லியில் நேரம் இருந்தால் அமித்ஷாவின் இவர்களது சந்திப்பு நடக்கும். இல்லையெனில்,மத்திய அமைச்சர் பியூஸ் கோயலையும், பாஜக தேசிய தலைவர் நவீனையும் சந்தித்து விவாதிப்பார்கள் என்று பாஜக தரப்பில் சொல்லப் படுகிறது.
அமித் ஷா அழைப்பு
எந்த சந்திப்பு நடந்தாலும் அன்புமணியும், தினகரனும் ஒரே நேர்க்கோட்டில் விவாதிக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்களாம். அதாவது, இரட்டை இலக்கத்தில் சீட் எண்ணிக்கை வேண்டும்; அதை குறைத்தால் ஏற்கக்கூடாது. அடுத்து, தாமரை சின்னத்தில் நமது வேட்பாளர்களைப் போட்டியிட வைக்க பாஜக தலைமை வலியுறுத்தும். இதற்காகத்தான் டெல்லிக்கு அழைத்துள்ளனர். அதனால், தாமரை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டால் நாம் இருவரும் அதனை துணிச்சலாக மறுக்க வேண்டும் என தினகரனும் அன்புமணியும் பேசி முடிவெடுத்துள்ளனர். மேலும், ஒதுக்கப்படும் சீட்டுகளின் எண்ணிக்கையில், பாதி இடங்களில் தாமரையிலும், பாதி இடங்களில் உங்கள் சின்னத்திலும் போட்டியிடுங்கள் என வலியுறுத்தினாலும் அதையும் நாம் ஏற்கக்கூடாது என்கிற முடிவையும் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துள்ளனர்.
ஃபேஸ் டைம்மில் ஆலோசனை
நேற்று இரவு அன்புமணியும் தினகரனும் ஃபேஸ் டைம்மில் இது குறித்து விவாதிக்கும் போதே இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். விவாதத்தின் ஒரு கட்டத்தில், ''இரட்டை இலையில் போட்டியிட வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி, பியூஸ் கோயலிடம் சொல்லியிருக்கிறார். என்னிடம் இதை அவர் சொன்னபோது, இரட்டை இலையில் வேண்டாம்; தாமரையில் போட்டியிடுங்கள் என வலியுறுத்தினார். அதற்கு நான், இலையோ தாமரையோ எந்த சின்னத்திலும் போட்டியிட மாட்டேன் என தெளிவாக சொன்னப் பிறகும் டெல்லிக்கு அழைக்கிறார்கள்'' என்று தினகரன் ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார்.
அதற்கு அன்புமணி, ''தனிக்கட்சி நடத்துகிறோம். அதன் அடிப்படையில்தான் கூட்டணியில் ஒரு கட்சியாக இணைந்திருக்கிறோம். அப்படியிருக்கும் போது அவர்களது கட்சி சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவது தர்மம் இல்லை. திமுக, அதன் கூட்டணி கட்சிகளிடத்தில் செய்த வேலையை இங்கு நம்மிடம் காட்டுகிறார்கள். ரெட்டை இலையில் போட்டியிடச் சொல்லி எனக்கு எந்த நெருக்கடியையும் எடப்பாடி பழனிச்சாமி தரவில்லை. ஆனாலும், உங்களுக்கு ஆதரவாக எனது கருத்தை டெல்லியில் சொல்வேன் '' என்று தினகரனை ஆறுதல் படுத்தியிருக்கிறார் அன்புமணி.
இருவரும் ஒரு புள்ளியில் இணைந்து ஒரு முடிவை எடுத்துக் கொண்டு டெல்லிக்குச் செல்லும் நிலையில், டெல்லியில் எந்த அழுத்தத்தைச் சொல்லி இவர்களிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தப்போகிறதோ என்கிற கேள்வியும் அன்புமணி மற்றும் தினகரனிடம் இருக்கிறது.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications