49 தொகுதிகள்.. 11 பொறுப்பாளர்கள்.. பாஜக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கும் சீனியர்கள்
சென்னை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கு சுற்றுப் பயண பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்கிற வியூகத்துடன் அதிமுக பாஜக கூட்டணி களமிறங்கியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி தினகரனை கூட்டணியில் இணைத்துள்ளனர். மேலும் சில கட்சிகளை இணைத்து கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.

பாஜக சுற்றுப் பயண பொறுப்பாளர்கள்
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவையில் உள்ள சிங்காநல்லூர் தொகுதி, மதுரை தெற்கு, காரைக்குடி, ஶ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப் பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்படுகிறார். அதேபோல திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, ஊட்டி ஆகிய 5 தொகுதிகளுக்கு எல். முருகன் பாஜக சுற்றுப் பயண பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
கோவை தெற்கு, திருப்பூர் தெற்கு, குன்னூர் ஆகிய 3 தொகுதிகளில் வானதி சீனிவாசன் மற்றும் பொள்ளாச்சி, கும்மிடிபூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, கிளியூர் ஆகிய 5 தொகுதிகளில் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக சுற்றுப் பயண பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பத்தூர், உடுமலைப்பேட்டை ஆகிய 4 தொகுதிகளுக்கு ஹெச். ராஜா பாஜக சுற்றுப் பயண பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
49 தொகுதிகள் டார்கெட்
எழும்பூர், ராசிபுரம், பரமத்திவேலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு வி.பி. துரைசாமி மற்றும் மேட்டுப்பாளையம், தென்காசி, பரமக்குடி, பழனி ஆகிய 4 தொகுதிகளுக்கு பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சுற்றுப் பயண பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் மேற்சொன்ன 30 தொகுதிகளை முக்கியத்துவம் கொடுத்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல, பாஜக பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டிக்கு தலா 7 தொகுதிகளும், பாஜக நிர்வாகி சக்கரவர்த்திக்கு 2 தொகுதிகளும், ஏஜி சம்பத்துக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications