வானதி சீனிவாசனுக்கு புதிய பதவி.. ஆந்திரா பாஜகவின் இணை பொறுப்பாளராக நியமனம்.. பின்னணி என்ன?
டெல்லி: ஆந்திர மாநில பாஜகவின் இணைப் பொறுப்பாளராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன் பாஜகவின் தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டிருந்தார். இதன்பின் அடிக்கடி டெல்லி சென்று வந்த சூழலில், தற்போது புதிய பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. திமுகவை எதிர்க்க தவெக மிகப்பெரிய அலையாக உருவாகியுள்ள சூழலில், அண்ணாமலையும் தனிக் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். இதனால் பாஜக அமைப்பு ரீதியாக பின்னடைவை சந்தித்து வந்தது.

இதனால் பாஜகவை சரிவு பாதையில் இருந்து மீட்க அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக பாஜகவின் பொறுப்பாளராக அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இணைப் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா, டிகே அருணாவை நியமனம் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் புதிய பொறுப்பாளர்கள் குழு கட்சியின் அமைப்பு, நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு மற்றும் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்கள் என்று தெரிகிறது. அதேபோல் ஆந்திர மாநில பாஜகவின் இணைப் பொறுப்பாளராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் பாஜகவின் தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டிருந்தார். இதன்பின் நயினார் நாகேந்திரனுடன் சில முறை வானதி சீனிவாசன் டெல்லி சென்று தலைமையை சந்தித்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமல்லாமல் தேசிய அளவில் மொத்தமாக 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கான பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. அதிலும் ஸ்மிருதி இரானிக்கு ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் மாநில பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பாஜகவின் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications
