பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம்.. என்னாச்சு?
சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளையும் திமுக மீண்டும் கைப்பற்றியது. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 542 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை வாக்கு இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதி வாக்கு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன.
வட சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 3,38,724 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2,44,364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாடு முழுவதும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. ஒரு இடத்தில் கூட பாஜகவினர் வெற்றியைப் பெற முடியவில்லை. எனினும், பாஜகவின் வாக்கு சதவீதம் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், திமுக வேட்பாளர் தயாநிதி மாறனிடம் தோல்வியடைந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மன்னித்து விடுங்கள் பிரதமர் மோடி. நான் உங்களை தலைகுனிய வைத்துவிட்டேன். எனினும் தொடர்ந்து போராடி உங்களது திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வேன். மாற்றம் வெகு தொலைவில் இல்லை.
இந்த மக்களவை தேர்தலில் திமுக வாரிசான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் அமைச்சர் சேகர்பாபுவையும் எதிர்த்து அவர்களது கோட்டையில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளோம். மத்திய சென்னை தொகுதியில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு பணியாற்றிய பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றி. நாங்கள் விட மாட்டோம். ஜெய் பாஜக" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications