வெரி டெலிகேட் பொசிஷன்..மக்களவை தேர்தலில் மண்ணைக் கவ்விய பாஜக..இன்று கமலாலயத்தில் மையக் குழு கூட்டம்!
சென்னை: மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற இருக்கிறது. அண்ணாமலை தலைமையில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது குறித்து ஆராய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அந்த கூட்டணி 40க்கு 40 என தமிழகம் புதுவை தொகுதிகளில் வெற்றி பெற்றது கூட்டணி கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்த கூட்டணி தவிர்த்து.. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மக்களவைத் தேர்தலில் களம் கண்டன. இந்த இரண்டு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியுமே தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது அரசியல் களத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததால் தான் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் அண்ணாமலை தான் என சமூக வலைதளங்களில் 'சில' பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகி இருந்தால் பெரிய அளவிலான வெற்றி கிடைத்திருக்கும் குறைந்தது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது பெற்றிருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.
மேலும் கூட்டணி தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அண்ணாமலையின் பேச்சு காரணமாக கூட்டணி அமையாமல் போனது.. இதனால் தான் பாஜக கடும் தோல்வியை சந்தித்தது என கூறியிருந்தார். அவரது கருத்தை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்று பேசியிருந்தார். குறிப்பாக கட்சியில் ரவுடிகள் இருப்பதாக தமிழிசை பேசியது கட்சிக்குள் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இதனால் பாஜகவில் இரு அணிகள் உருவாகியிருப்பதாகக் கூறப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மேடையிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்புடன் விவாதித்தார். தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை- தமிழிசை தரப்பு இடையேயான மோதல் குறித்த அப்போது அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ அதிக அளவில் கவனத்தை பெற்ற நிலையில், அடுத்த நாள் அண்ணாமலை தமிழிசையை சந்தித்து, அக்கா- தம்பி என ட்வீட் போட்டனர்.
இந்நிலையில் தான் மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகளான எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் சரிந்தது, கேரளாவில் ஒரு எம்பி தொகுதி பெற்ற நிலையில் தமிழகத்தில் படுதோல்வியை சந்திக்க காரணம், கட்சியின் எதிர்கால திட்டங்கள், கட்சியில் இருக்கும் உட்கட்சி மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டத்தின் முடிவில் தோல்விக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் தோல்விக்கு பிறகு நடக்கும் முதல் பாஜக கூட்டம் என்பதால் இந்த கூட்டம் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications