ஹேமா கமிட்டி ரிப்போர்ட்! "ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும் சிக்குவார்கள்.." பகீர் குற்றச்சாட்டு
சென்னை: மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டில் சில அரசியல் தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர்களைக் கேரள அரசு காக்க முயல்வதாகவும் சாடியுள்ளார்.
மலையாள சினிமாவில் உள்ள பிரச்சினை குறித்து ஹேமா கமிட்டி ரிப்போர்ட் பகீர் கிளப்பியது. இருப்பினும், இந்த விவகாரத்தில் கேரள அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற விமர்சனம் இப்போது பரவலாக எழுந்துள்ளது.

ஹேமா கமிட்டி: இதற்கிடையே ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஹேமா கமிட்டி ரிப்போர்ட் மீது கேரள அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சாடிய அவர், இந்த விவகாரத்தில் சில சிபிஎம் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே முதல்வர் பினராயி விஜயன் இதை மறைக்க முயல்வதாக விமர்சித்துள்ளார்.
கேரளாவின் பாலக்காட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பேசிய ஜேபி நட்டா, "கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக ஹேமா கமிட்டி ரிப்போர்ட் கூறியிருக்கிறது. இதைக் கேட்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது. கேரள முதல்வர் இது குறித்த உண்மையைப் பொதுமக்களுக்குச் சொல்ல வேண்டும்.
"பாலியல் அத்துமீறல்..:" மலையாள சினிமாவின் கொடூர முகம்! ஹேமா கமிஷனின் முழு ரிப்போர்ட் PDF இதோ
கேள்வி: ஹேமா கமிட்டி அறிக்கை மீது நடவடிக்கை எடுத்து அதில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏன்? இந்த விவகாரத்தில் கேரள அரசை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பது எது? உங்களைத் துன்புறுத்துவது எது? உங்கள் தலைவர்களே இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாலேயே இதை நீங்கள் மறைக்க முயல்கிறீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.
மலையாள சினிமா: கடந்த 2017ம் ஆண்டு மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஒருவர் கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற கேரள ஐகோர்ட் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த ஹேமா கமிட்டி மலையான சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகள், பெண் தொழில்நுட்ப கலைஞர்களிடம் சென்று பேசியுள்ளனர். கடந்த 2019 டிசம்பரில் கேரள அரசிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், இதைக் கேரள அரசு வெளியிடவில்லை. பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்த அறிக்கை ஆகஸ்ட் 19ல் தான் வெளியானது. அதிலும் கூட தனிநபர்களின் பெயர்கள் இருக்கும் பகுதிகள் பிரைவசி காரணமாக வெளியிடப்படவில்லை.

அதிர வைக்கும் தகவல்: இந்த ஹேமா கமிட்டி ரிப்போர்ட் மலையாள சினிமாவை அதிர வைப்பதாக இருந்தது. அதில் டாப் ஹீரோக்கள் மட்டுமே இருக்கும் சக்திவாய்ந்த மாஃபியாவின் பிடியில் மலையாள சினிமா இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'காஸ்டிங் கவுச்' என்ற பெயரில் சினிமா துறையில் வாய்ப்பு தேடும் பெண்களிடம் அத்துமீறுவது, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடிகைகள் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் எனப் பல விஷயங்கள் அதில் கூறப்பட்டு இருந்தது.
மலையாள சினிமாவை அதிர வைத்த இந்த ரிப்ரோட்டை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினை குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் அந்த புகார்கள் பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications