குஷ்பு உள்ளிட்டோர் மீது அவதூறா?.. கடவுள் மன்னிக்கவே மாட்டார்.. காலம் பதில் சொல்லும்.. பாஜக கண்டனம்
சென்னை: பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு சுந்தர் உள்ளிட்ட 4 பேர் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அக்டோபர் 4 ஆம் தேதி திமுக கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவை மீறி திமுக பேச்சாளர் சைதா சாதிக் பாஜகவில் உள்ள நடிகைகளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. சென்னை ஆர்கே நகரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில்தான் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

பாஜக
பாஜகவை சேர்ந்த குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினையும் கனிமொழியையும் டேக் செய்து போட்ட பதிவில், ஆண்கள் பெண்களை தவறாகப் பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும் அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது.

பெண்ணின் கருப்பையை அவமதிக்கும் பேச்சாளர்
இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இது போன்ற ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என அழைத்துக் கொள்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா? என குஷ்பு கேள்வி எழுப்பியிருந்தார்.

கனிமொழி பதில்
குஷ்புவின் இந்த ட்வீட்டிற்கு கனிமொழி பதிலளித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும் சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இது எக்காரணத்தை கொண்டு சகித்துக் கொள்ள முடியாதது.

மன்னிப்பு
இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க முடிகிறது. எனது தலைவர் ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒரு போதும் ஏற்புடையது இல்லை என தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு மீண்டும் ஒரு பதிவில், உங்களுடைய நிலைப்பாட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால் நீங்கள் எப்போதும் பெண்களின் மதிப்பு மற்றும் சுயமரியாதைக்காக குரல் கொடுத்தவர் என கூறியுள்ளார்.

கடும் கண்டனம்
திமுக பேச்சாளரின் இது போன்ற தரக்குறைவான பேச்சால் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: குஷ்பு சுந்தர் உள்ளிட்டோர் குறித்து தி மு க மேடையில் பேசப்பட்ட விவகாரத்தை மன்னிப்பு கேட்கிறோம். மறந்து விடுவோம் என்று கடந்து செல்வது பெண்ணினத்திற்கே செய்யும் மிக பெரிய துரோகம்.

நாராயணன் திருப்பதி கண்டனம்
பொது வாழ்க்கையில் பெண்கள் மீதான அருவருப்பான விமர்சனங்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை மட்டுமல்ல. கடுமையாகதண்டிக்கப்பட வேண்டிய குற்றமும் கூட. இதை மூடி மறைத்து, மறப்போம், மன்னிப்போம் என்ற நாடகங்களை ஆளுங்கட்சியினர் அரங்கேற்றுவது முறையற்ற செயல். அதிகார மமதையினால் நடவடிக்கை எடுக்காமல் போனாலும் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டான். நீதி உங்களை நிற்க வைத்து கேள்வி கேட்கும்.காலம் பதில் சொல்லும். இவ்வாறு நாராயணன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications