"திரும்ப பெறுங்க".. பாஜகவை டென்சனாக்கிய அதிமுகவின் பளீர் அறிவிப்பு.. நெருக்கும் தலைகள்.. சரியில்லையே
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்தை கைவிட கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது... ஆனால் அதிமுகவின் இந்த அறிவிப்பை பாஜக தரப்பு கொஞ்சம் கூட விரும்பவில்லை.
பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கை தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியாகி உள்ளது. முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
முக்கியமான பல வளர்ச்சி திட்டங்கள், இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சிஏஏ
முக்கியமாக குடியுரிமை சட்ட திருத்தத்தை கைவிட கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. அதோடு ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெற வைத்தனர்.

ஆதரவு
சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதனால் இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறோம் என்று அதிமுக சிஏஏவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. சிஏஏவிற்கு ஆதரவு அளித்த நிலையில் தற்போது இந்த சட்டத்திற்கு எதிராக அழுத்தம் கொடுப்போம் என்று அதிமுக திடீர் என்று கூறியுள்ளது. அதிமுகவின் இந்த திடீர் அறிவிப்பை பாஜக கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

தகவல்
அதிமுகவின் இந்த அறிவிப்பை பாஜக கொஞ்சம் கூட விரும்பவில்லை என்று தகவல்கள் வருகின்றன. சிஏஏ குறித்து அதிமுக பேசி இருக்க கூடாது. இதை பற்றி எந்த வாக்குறுதியும் கொடுத்து இருக்க கூடாது. தேவையின்றி இந்த விஷயத்தை இப்போது எடுத்துவிட்டனர், இதை பற்றி அறிக்கையில் அதிமுக எதுவும் சொல்லி இருக்க கூடாது என்று பாஜக நினைக்கிறது .

திரும்ப பெற வேண்டும்
இதனால் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று பாஜக நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளது. தமிழக பாஜக சிடி பொறுப்பாளர் சிடி ரவி தொடங்கி அதிமுகவிற்கு நெருக்கமாக இருக்கும் பல பாஜக தலைகள் இது தொடர்பாக அதிமுகவிடம் தங்கள் வருத்தத்தையும் தெரிவித்து உள்ளனராம். இந்த வாக்குறுதியை மட்டும் திரும்ப பெற முடியுமா என்று கோரிக்கையாக கேட்க தொடங்கி உள்ளனராம்.

உறுதி
ஆனால் அதிமுகவோ இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இதுதான் எங்கள் வாக்குறுதி. இதில் மாற்றம் இல்லை, வாக்குறுதியை அளித்த பின்பெல்லாம் அதை திரும்ப பெற முடியாது என்று அதிமுக தரப்பு உறுதியாக தெரிவித்துவிட்டது என்கிறார்கள். அதிமுக தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமே செய்ய முடியாது என்று அதிரடியாக கூறிவிட்டதாம்.

பெரிதுபடுத்தாது
இதனால் இந்த விஷயத்தை பாஜக பெரிதுபடுத்தாது என்கிறார்கள். இது அதிமுகவின் தனிப்பட்ட கொள்கை. கூட்டணியின் மொத்த கொள்கை இல்லை என்பதை மட்டும் தெளிவுபடுத்திவிட்டு பாஜக பிரச்சனை செய்யாமல் விலகிக் கொள்ளும் என்கிறார்கள். சிஏஏ காரணமாக கூட்டணிக்குள் பெரிதாக பிளவு வராது சின்ன கருத்து வேறுபாடு மட்டும் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்!












Click it and Unblock the Notifications