பள்ளிகளில் சாதி..நெற்றித் திலகத்துக்கு தடை? அப்போ ஹிஜாப் மட்டும் போடலாமா? சீனுக்குள் வந்த எச்.ராஜா
சென்னை: பள்ளி கல்லூரிகளில் சாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்கான வழிகளை கண்டறிய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் நெற்றியில் திலகம் இடுவது, சாதி வண்ண கயிறுகள் கட்டுவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெற்றியில் திலகத்துக்கு தடை என்றால் ஹிஜாப்புக்கும் தடை விதிக்கப்படுமா என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகனான சின்னதுரை அங்குள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிவெறி ஊறிப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதுதொடர்பாக சின்னதுரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்திய போது பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை சாதி ரீதியாக தாக்குவதாக கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியிருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் ஏன் தங்களை பற்றி ஆசிரியர்களிடம் சொன்னாய் என மிரட்டியதோடு பள்ளி முடிந்த பின்பும் தாக்கியுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்குச் சென்ற அவர்கள் சின்ன துரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
அதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அருகில் இருந்தோர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவத்தை கேட்டு சின்ன துரையின் தாத்தா கிருஷ்ணனும் மாரடைப்பால் உயிரிழந்தார்.இதையடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன.
இதனிடையே இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு ஆண்டுக்குப் பின் நீதியரசர் சந்துரு குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது.
அதில் பள்ளிகளில் சாதிய வன்முறைகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது. அதில் அரசு பள்ளிகளில் உள்ள ஆதிதிராவிடர், கள்ளர் உள்ளிட்ட வார்த்தைகளை நீக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும், குறிப்பிட்ட சாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது, எக்காரணம் கொண்டும் மாணவர்களின் வருகை பதிவேட்டில் சாதி பெயர் இடம் பெறக் கூடாது என கூறப்பட்டிருந்தது..
மேலும், மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும், கைகளில் வண்ணக் கயிறு, நெற்றி திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெற்றி திலகத்திற்கு தடை என்றால் ஹிஜாபுக்கு தடை கிடையாதா? என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஹிஜாப் தடை செய்யப்படக் கூடாது என்பவர்கள் இந்துக்கள் அணியும் கோவில் ரட்சை (வண்ணக் கயிறு) மற்றும் நெற்றி திலகம் ஆகியவற்றை தடை செய்ய முற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது முழுவதும் ஈவாஞ்சலிஸ்ட் கைவேலை. இந்துக்கள் உரிமை காப்போம்." என கூறியுள்ளார். அவரது பதிவில் பாஜகவினர் ஆதரவாகவும், மாற்று அமைப்பினர் எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications