2 ஆண்டு சிறை.. நேரா ராகுலுக்கே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்.. ‛ஜனநாயகத்தை நசுக்கும் பாஜக’ என சாடல்
சென்னை: மோடி பெயர் தொடர்பாக சர்ச்சை கருத்தை கூறிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் ஜாமீன் வழங்கி மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜனநாயக உரிமையை நசுக்கும் பணியில் பாஜக ஈடுபடுவதாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியின் ‛மோடி' என்ற பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அவரது பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராகுல் காந்தி திட்டமிட்டு பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கூறினர்.

நேரில் ஆஜரான ராகுல் காந்தி
மேலும் குஜராத் முன்னாள் அமைச்சரான புர்னேஷ் மோடி, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.

2 ஆண்டு சிறை
இதன் பின்னர் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதோடு, அவரக்கு 2 ஆண்டு சிறை தண்டனையையும் நீதிமன்றம் வழங்கு உத்தரவிட்டது. மேலும் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. அதன்படி ராகுல் காந்தி தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

ராகுலிடம் பேசிய ஸ்டாலின்
இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான முதல்வர் ஸ்டாலின் இன்று ராகுல் காந்தியை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது திமுகவின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு என முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த விஷயத்தில் பாஜகவை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் கூறியது என்ன?
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛குற்றம்சாட்டும் மனநிலையில் தான் இந்த கருத்தை கூறவில்லை என ராகுல் காந்தி கூறியபோதும் அவருக்கு தண்டனை வழங்கி இருப்பது வருத்தத்துக்குரியது. எதிர்க்கட்சிகளை குறிவைக்குமு் பாஜக இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதுபோன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும். சகோதரர் ராகுல் காந்தியுடன் பேசி எனது ஆதரவை தெரிவித்தேன். இந்த விஷயத்தில் இறுதியில் நீதி வெல்லும் என நான் நம்புகிறேன்'' என்றார்.


Click it and Unblock the Notifications
