"பின்னால் இருந்து இயக்குவதே பாஜக தான்.." விஜய் குறித்த கேள்வி.. திமுக சரவணன் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: அம்பேத்கர் குறித்த புத்தக வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன், இந்த ஒட்டுமொத்த விவகாரத்திற்குப் பின்னால் பாஜக தான் இருப்பதாகச் சாடியுள்ளார். மேலும், திமுக யாரைக் கண்டும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் நேற்றைய தினம் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார்.

விஜய்: அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவை மறைமுகமாகச் சாடியிருந்தார். இறுமாப்போடு சிலர் 200 தொகுதிகளில் வெல்வதாகப் பேசுவதாகவும் அவர்களின் நம்பிக்கை 2026இல் வீணாகப் போகும் என்பது போலப் பேசியிருந்தார். அதேபோல இந்த நிகழ்ச்சியில் விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்கு இனியும் இடமில்லை. 2026இல் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் முதலமைச்சராக ஒருவர் உருவாக்கப்படக் கூடாது" என்று அவர் கூறியிருந்தார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இதற்கு உதயநிதி இன்று பதிலடி கொடுத்திருந்தார். விஜய் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி, அரசியல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்று கூறியிருந்தார். மேலும் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு, "இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரே முதல்வராக இருக்கிறார். அந்த அறிவு கூட அவருக்கு இல்லையா" என்று காட்டமாகப் பதிலடி கொடுத்து இருந்தார்.
திமுக சரவணன்: இந்தச் சூழலில் ஒட்டுமொத்த விவகாரத்தையும் பாஜக தான் பின்னால் இருந்து இயக்குவதாக திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கூறுகையில், "எங்களுக்கு யாரைப் பார்த்தும் அச்சம் இல்லை.. மக்கள் செல்வாக்கோடு திமுக ஆட்சியை நடத்தி வருகிறது.
கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சிக்கு மிக பெரிய அங்கீகாரமாக லோக்சபா தேர்தல் வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். எனவே, திமுக யாரைக் கண்டும் அச்சப்படத் தேவையில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் ஆகியோரை கண்டு எல்லாம் அச்சப்படாத திமுக, இப்போது மட்டும் அச்சப்படப் போகிறதா..
பின்னால் இருப்பதே பாஜக: திமுகவினர் இங்கு வலிமையாக இருக்கிறது என்பதால் பலவீனப்படுத்த பாஜக முயல்கிறது. இவற்றை எல்லாம் பின்னால் இருந்து இயக்குவதே பாஜக தான். மற்ற மாநிலங்களைப் போல இங்கே சோசியல் இன்ஜினியரிங் செய்ய முடியாததால் இங்கே பாஜக இதையெல்லாம் செய்கிறது. திருமாவளவனை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது அதிமுக தான். ஆனால், அவர்கள் எதுவும் தெரியாதது போல இருக்கிறார்கள்" என்றார்.
திருமாவளவன்: நேற்றைய தினம் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் முதலில் விசிக தலைவர் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்தது. இருப்பினும், சில காரணங்களால் திருமாவளவன் அதில் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருமாவளவன் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications