39 தொகுதிக்கும் வேட்பாளர்கள் லிஸ்ட் எடுங்க.. பறந்த ஆர்டர்.. திகிலில் கட்சிகள்.. பாஜகவின் பிளான் ‘B'?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜகவிற்கு விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு லிஸ்ட் தயாராக உள்ளதாம்.
நெருங்கும் தேர்தல்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுகவை தொடர்ச்சியாக அண்ணாமலை சீண்டி வந்தார். இது அதிமுக தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பாக இருந்து வந்த சூழலில் தான், கூட்டணியை முறித்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தது அதிமுக. அதையடுத்தே, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக உடனான கூட்டணி முறிவை உறுதிப்படுத்தியதுடன், இது அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் விருப்பம் என்றும் தெரிவித்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததற்கு இதுதவிர பல்வேறு காரணங்கள் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அதிமுக - பாஜக கூட்டணி முறிவே ஒரு தேர்தல் நாடகம் தான் என்று திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
பாஜக தேர்தல் திட்டம்: இதற்கிடையே அண்ணாமலையை பாஜக தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்தது. பாதயாத்திரையில் இருந்த அவர், அதனை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக டெல்லி சென்றார். அங்கு நிர்மலா சீதாராமனிடம் பேசிய அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர்களையும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது என்று உத்தரவிட்டதோடு, தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும் தேசிய தலைவர்கள் அண்ணாமலைக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை, கடந்த 5ஆம் தேதி பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். பாஜக மூத்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், தேசிய தலைமை தன்னிடம் தெரிவித்த விஷயங்களை, நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார் அண்ணாமலை. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன என்பதையும் நிர்வாகிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார் அண்ணாமலை.

பாஜக உருவாக்கும் அணி: அதிமுக கூட்டணி முறிந்துள்ளதால், பாமக, தேமுதிக, அமமுக, புதிய தமிழகம், ஐஜேகே, ஓபிஎஸ் ஆகியோருடன் கைகோர்த்து ஒரு புதிய பிரமாண்ட கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜக தமிழகத்தில் தனித்து ஒரு அணியைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த விஷயங்களை தலைமை கவனிக்கும் என்ற நிலையில், தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆர்டர் போட்டிருக்கிறாராம் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி வாரியாக பாஜகவிற்கு பொறுப்பாளர்களை நியமிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்களாம்.
39 தொகுதிகளுக்கும் ஏன்?: அடுத்த வாரத்திற்குள் 39 தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாஜக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
பாஜக தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அடையாளம் காண திட்டமிட்டுள்ளது ஏன் என்ற கேள்விகளும் சிறகடிக்கின்றன. ஒருவேளை எதிர்பார்க்கும் கூட்டணி அமையாவிட்டாலும் தேர்தல் பணிகளில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது என்பதற்கான 'பிளான் பி' தான் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கச் சொல்லியிருப்பதற்கான காரணம் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications