தமிழ்நாட்டில் பாஜக சின்னக் கட்சி.. பாமகதான் எதிர்க்கட்சி! மோடியால் ஊழல் குறைந்துள்ளது - அன்புமணி
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக சிறிய கட்சிதான் என்றும், திமுகவை எதிர்க்கும் அளவிற்கு அக்கட்சி வளரவில்லை எனவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை விட பாஜக கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருவதுடன் போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் பாஜக எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும், அதிமுக பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டதாகவும் கருத்துகள் எழத் தொடங்கி இருக்கின்றன. நேற்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூட தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல என்று பேசினார்.

மோடி வந்தபின் ஊழல் குறைந்துள்ளது
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் "பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகு இந்திய அளவில் ஊழல் பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. நிச்சயமாக நாம் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நிர்வாக சீர்திருத்தங்கள் நிறைய செய்துள்ளார்கள். அதாவது இன்று தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான்.

பாமகவின் அறிக்கைகள்
அன்றாடம் எங்களின் அறிக்கைகள், செய்திகள், புள்ளி விபரங்கள், போராட்டங்கள், அணுகுமுறைகளை பார்க்கிறீர்கள். நாம் சொல்லி இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த அதிமுகவும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. நாங்கள் சொல்லி இப்போது இருக்கிற திமுக அரசும் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதாவது வேண்டுமென்றே யாரையும் நாங்கள் எதிர்ப்பது கிடையாது.

எதிர்க்கட்சி பாமக
உண்மையான மக்கள் பிரச்சனைகளை சார்ந்து நாங்கள் எதிர்ப்போம். அந்த வகையில் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான். தமிழ்நாட்டில்
சமீபத்தில் ஒரு தவறான கதை பரப்பப்படுகிறது. திமுகவுக்கும் பாஜகவுக்கும் போட்டி என்ற கதை பரப்புகிறார்கள். அது வெறும் கணிப்புதான். உண்மையாக களத்தில் அப்படி கிடையாது. ஒரு சில ஊடகங்கள் இப்படி சொல்கிறார்கள். உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.

தமிழ்நாட்டில் பாஜக சின்னக் கட்சி
பாஜக என்பது இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சி. தேசியக்கட்சி. ஆளும் கட்சி. தமிழ்நாட்டை பொருத்தவரை அது சிறிய கட்சிதான். அது வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சின்ன கட்சிதான். திமுகவை எதிர்க்கும் பலம் எல்லாம் பாஜகவுக்கும் கிடையாது. எங்களுக்கு மட்டுமே திமுகவை எதிர்க்கும் பலம் இருக்கிறது. நாங்கள்தா எதிர்க்கட்சி" என்றார்.












Click it and Unblock the Notifications