"பிடிஆர் சொல்றது இருக்கட்டும்.. முதல்ல திமுகவை இதை பண்ண சொல்லுங்க".. எல்.முருகன் கறார் பேச்சு
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, பெட்ரோல் டீசல் விலையில் 5 ரூபாயை முதலில் குறைக்கட்டும்.. அதனை திமுக குறைத்தால், பெட்ரோல் டீசல் விலையும் குறையும்" என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மபொ சிவஞானத்தின் 116வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இதையொட்டி, சென்னை பாஜக ஆபீசில், ம.பொ.சிவஞானத்தின் படத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்...
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களை போற்றுவது என்பது எப்போதுமே பாஜகவின் வழக்கம்..

பேட்டி
அந்த வகையில் மபொ சிவஞானத்தை 116வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது... மா.பொ.சிக்கு தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும்... வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும்" என்றார்.

பஞ்சமி நிலம்
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என விசிக சார்பில் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பஞ்சமி நிலங்களை மீட்க பட வேண்டும் என பாஜக தேர்தல் அறிக்கையிலேயே சொல்லி இருந்தோம்.. அதனால், பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை" என்றார்.

பிடிஆர்
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு மத்திய அரசுதான் காரணம் என்று நிதியமைச்சர் பிடிஆர் சொல்லி உள்ளாரே, இது தொடர்பான சில தகவல்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளாரே என்று கேட்கப்பட்டது.. அதற்கு முருகன், "பெட்ரோல் டீசல் விலை உயர்வை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டு வருகிறது.

5 ரூபாய்
மாநில நிதி அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... முதலில் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, பெட்ரோல் டீசல் விலையில் 5 ரூபாயை முதலில் குறைக்கட்டும்.. அதனை திமுக குறைத்தால் பெட்ரோல் டீசல் விலையும் குறையும்" என்று முருகன் பதிலளித்தார்.

எச்.ராஜா
இதையடுத்து, பாஜக நிர்வாகிகள் மீது பாலியல் புகார் தொடர்பாக செய்தி வெளியாகி வருகிறதே, நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதா? என்றும், எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சொல்லி வருகிறார்களே என்றும், இருவேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.. இதற்கு முருகன்,"பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டதுபோல் எந்த நிகழ்வும் நடக்கவில்லை. அது பொய் தகவல்.. செய்தியை வெளியிட்ட அந்த தனியார் பத்திரிகைக்கு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.. எச்.ராஜா மீது நிர்வாகிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரிக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications