அண்ணாமலை "இடது கை".. இப்படித்தான் போவேன்.. விநாயகர் ஊர்வலத்தில் அமர் பிரசாத் வீம்பு.. தூக்கிய போலீஸ்
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதற்காக சென்னை முழுக்க தீவிர பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சென்னையில் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 2000க்கும் மேற்பட்ட போலீசார் இதற்காக களமிறக்கப்பட்டு இருந்தனர்.
சென்னையில் அமைதியாக ஊர்வலத்தை நடத்த வேண்டும். கலவரம் செய்ய கூடாது என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
முக்கியமாக இஸ்லாமியர் இருக்கும் பகுதிகளில் வேண்டுமென்றே ஊர்வலத்தை நடத்த முயன்று சிலைகளை எடுத்து செல்ல முயன்று பிரச்சனை செய்ய கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

விநாயகர் சதுர்த்தி
சென்னையில் பாலப்பக்கம், காசிமேடு, திருவெற்றியூர், ஸ்ரீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் ஆகிய கடற்கரைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. மெரினாவில் சிலைகளை கரைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள கடற்கரைகளில் தீவிரமாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் வழியாக விநாயகர் சிலையை கொண்டு செல்ல பாஜகவினர் முயன்றனர்.

பாஜக
இந்த வழியாக சிலையை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அங்கு இருக்கும் ரத்னம் கபே வழியாக வேண்டுமென்றே சிலையை எடுத்து செல்ல முயன்றனர். அங்கு மசூதிகளும், இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் நிலையைக் வேண்டுமென்றே தடையை மீறி இவர்கள் அங்கே ஊர்வலத்தை நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இந்து முன்னணி தலைவர் முருகானந்தம், தமிழ்நாடு பாஜக இளைஞரணி - விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

அமர் பிரசாத் ரெட்டி
அமர் பிரசாத் ரெட்டி அண்ணாமலைக்கு நெருக்கமானவர். இந்த நிலையில் இவர்கள் அத்துமீறி சிலையை எடுத்து செல்ல முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்தனர். சிலையை எடுத்து செல்ல கூடாது. இந்த பாதையில் சிலையை எடுத்து செல்ல அனுமதி இல்லை. வேறு பாதையில் செல்லுங்கள் என்று போலீசார் கூறினர். ஆனால் அதையும் மீறி.. நாங்கள் இப்படித்தான் போவோம்.. எங்களை தடுக்காதீங்க.. இந்த சாலையில் ஏன் செல்ல கூடாது என்று அமர் பிரசாத் ரெட்டி போலீசிடம் வாக்குவாதம் செய்தார்.

பேச்சுவார்த்தை
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சாலை மாற்றி செல்லவில்லை. இதையடுத்து அங்கு இருந்த அமர் பிரசாத் ரெட்டியை அப்படியே கைது செய்து போலீசார் வாகனத்தில் ஏற்றினார்கள். பாஜக நிர்வாகிகள், மற்ற இந்து முன்னணி நிர்வாகிகள் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதை எதிர்த்து அங்கு பாஜகவினர் திடீரென போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
