எடப்பாடி பழனிசாமியை சுற்றிவரும் பாஜக நிர்வாகிகள்.. தென் மாவட்டங்களில் மாஸ் கவனிப்பு.. காரணமே இதுதான்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் நேரடியாகச் சந்தித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் இருக்கும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், அதிமுகவின் தயவு இன்றி தங்களால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டத்தில் தொகுதி வாரியாக மக்களை சந்தித்தார். நெல்லை மாவட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரம்மாண்ட விருந்து ஒன்றை அளித்தார். அந்த விருந்து நிகழ்ச்சிக்கு அதிமுக முக்கிய தலைவர்களும், பாஜக முக்கிய தலைவர்களும் அழைக்கப்பட்டனர்.

பாஜக தரப்பில் தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோரும் கூட பங்கேற்றனர். மொத்தமாக இந்த விருந்து நிகழ்ச்சிக்கு நயினார் நாகேந்திரன் மொத்தமாக 150 முதல் 200 பேர் வரை மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நயினார் நாகேந்திரனே எதிர்பாராத வகையில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை அவரின் வீட்டின் முன்பாக குவிந்தனர்.
அதிமுக ஆதரவாளர்களை விடவும், பாஜகவின் 2ஆம் கட்ட தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் அதிகளவில் குவிந்தனர். இதற்கு முன் என்ன காரணம் என்று விசாரிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் மக்களை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு தொகுதிக்குச் செல்லும் போதும், அந்தந்த தொகுதியின் முக்கிய நிர்வாகிகளை அருகில் நிற்க வைப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.
இதனால் தென் மாவட்டங்களில் பாஜகவினர் அதிகளவில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதிமுகவிடம் சுமார் 40 தொகுதிகள் வரை பாஜக கேட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களிலேயே இந்த தொகுதிகள் அதிகளவில் அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக வேட்பாளர்கள் வெல்ல வேண்டுமென்றால், அது அதிமுக தயவு கட்டாயம் தேவை.
இதனையறிந்து எடப்பாடி பழனிசாமியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று பாஜகவினர் தீவிரம் காட்டுகின்றனர். அவரின் சுற்றுப்பயணத்தின் போது பாஜகவின் 2ஆம் கட்ட தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்கள் சரியான நேரத்தில் ஆஜராகிவிடுகின்றனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி அடிமட்ட அளவிலும் இணைந்து வருவதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications