திமுக அரசோடு கை கோர்த்த பாஜக! மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து சட்டசபையில் நயினார் பேச்சு
சென்னை: மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக பாஜக தனிப்பட்ட முறையில் வலியுறுத்தும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Recommended Video
கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகா மட்டுமல்லாது தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம்- கர்நாடகா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகா முடிவு செய்துள்ளது.

மேகதாதுவில் அணை
இந்த நிலையில் மேகதாதுவில் புதிய அணை கட்டும் பணிக்கு சட்டசபையில் நடப்பு நிதியாண்டில் ரூ 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசும் கண்டனத்தை பதிவு செய்தது. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி தமிழக அரசின் நிதி நிலை தாக்கல் செய்யப்பட்டது.

3 நாட்கள்
அதன் மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இன்றைய தினம் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசுகையில் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.

காவிரியின் குறுக்கே அணை
மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்ட கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டுகோள் விடப்படுகிறது என்றார். மேலும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலுக்கு தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆதரவு
அமைச்சர் துரைமுருகனின் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் பேசினர். அப்போது மேகதாது அணை குறித்து திமுக அரசு கொண்டு வரும் தீர்மானத்தை பாஜக முழு மனதாக ஆதரிப்பதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக பாஜக தனிப்பட்ட முறையில் வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications