எடப்பாடி பழனிசாமி உடன் பேசினாலே கூட்டணி அமைந்துவிடும்.. நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை! பரபர!
சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், நயினார் நாகேந்திரன் கருத்தால் விவாதம் எழுந்துள்ளது.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, ரெய்டு மூலம் அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர நெருக்கடி தரப்படுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

நயினார் நாகேந்திரன் பேசுகையில், "யார் யார் வீட்டில் பணம் இருக்கிறதோ, அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. திமுக பக்கம் கூட ரெய்டு நடக்கிறது. அதிமுக தரப்பில், பணம் இருப்போரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இதற்கும், கூட்டணி வற்புறுத்தலுக்கும் சம்பந்தம் இல்லை.
ரெய்டு மூலமாக மிரட்டல் விடுத்தது அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. சகோதரர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் சேர்ந்து பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். பிற கட்சிகளை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்ற தேவை பாஜகவுக்கு இல்லை. பேசினால் போதும்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தன. 2019 மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையில், பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. அப்போது அதிமுக 1 தொகுதியில் வென்றது.

தொடர்ந்து 2021 சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்த நிலையில், அதிமுக 66 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் வென்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு, இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கூட்டணி முறிந்தது. இதையடுத்து 2024 லோக்சபா தேர்தலை அதிமுக தனி அணியாகவும், பாஜக தனி அணியாகவும் சந்தித்தன. தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
அதேசமயம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். 2024 தேர்தலுக்குப் பிறகும் கூட, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன். அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார் நயினார் நாகேந்திரன்.
இந்தச் சூழலில், 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications