ஆமாங்க.. திமுகவின் சாதுர்யம் வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மை.. சொல்வது வானதி! ஸ்டாலினுக்கு பதில்!
சென்னை: மத்திய நிதி அமைச்சர் கூறியதை முதல்வர் ஸ்டாலின் வெள்ள நிவாரணம் குறித்து பேசியதாக சொல்லி திசை திருப்புகிறார் என்றும், திமுகவின் சாதுர்யம் வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மை என்றும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், வெள்ள நிவாரணங்களை ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது பேசிய ஸ்டாலின், "சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இரண்டு இயற்கை பேரிடருக்கும் சேர்த்து ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்கப்பட்டது. உங்களிடம் சாதுர்யம் இருந்தால் நீங்கள் சாதித்துக் கொள்ளுங்கள் என ஆணவமாக பதில் அளிக்கின்றனர்.

சாதுர்யம் இருப்பதால் தான் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முன்னேறி வருகிறது. தேர்தலில் வாக்குக் கேட்க மக்களை சந்திக்கப் போகிறோம் என்று பயம் கூட மத்திய அரசுக்கு இல்லை. தமிழ்நாட்டை பாராமுகமாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல. மத்திய பாஜக அரசின் தடையையும் தாண்டித்தான் தமிழ்நாடு சாதித்து வருகிறது" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தூத்துக்குடி,திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராமல் இருந்தும் மக்களுக்கு அனைத்தையும் கொடுத்தவன் இந்த ஸ்டாலின்.
அதுமட்டுமின்றி மத்திய அரசிடம் ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சரும் தமிழக மக்களை சந்திக்கப்போகும் தேர்தல் என்ற அச்சம் சிறிதும் இல்லாமல் பாராமுகமாக உள்ளனர். இதை கேட்டால் சாதுர்யம் இருந்தால் சாதிக்கலாம் என்று மத்திய அமைச்சர் கூறுகிறார் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே மத்திய அரசுடன் தேவையில்லாத மோதலை கடைபிடித்து வருகிறார். தேர்தல் நேரத்தில் ஒன்றிய ஆட்சி பற்றி பேசாமல், ஆட்சிக்கு வந்ததும், யூனியன் அரசு என பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கின்றனர். அன்று தொடங்கியதை திமுக தொடர்ந்து செய்து வருகிறது.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை பொருளாதாரத்தில் முதல் நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சிய இலக்குடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமில்லை. எனவே பாஜக ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்தி வருகிறது மத்திய பாஜக அரசு. 'உள்ளடக்கிய வளர்ச்சி' என்பது பாஜக அரசின் தாரக மந்திரம்.
நிதி ஆயோக் வகுத்துள்ள விதிமுறைகளின்படி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது. பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. அதாவது ரூ. 1,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கூடுதல் நிதி அளிக்கும்.
லோக்சபா தொகுதி மறுவரையறையில் பாதிப்பு ஏற்படும் என கருதும் மாநிலங்கள், ஆதாரத்துடன் கருத்துக்களை முன்வைத்தால், பாதிப்பை தடுக்க முடியும் என, மத்திய நிதி அமைச்சர் கூறினார். அதாவது தமிழகத்திற்கு உதவும் வகையில் இப்படி ஒரு கருத்தை தெரிவித்தார்.
அதைத்தான் 'சாதுர்யம் இருந்தால் சாதிக்கலாம்' என்றார். அதை முதல்வர் ஸ்டாலின் வெள்ள நிவாரணம் என்று சொல்லி திசை திருப்புகிறார். குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதிலும், அறிவியல் ரீதியாக சிதைப்பதிலும் திமுகவின் சாதுர்யம் வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மை.
மத்திய நிதியமைச்சருக்கு திமுகவால் பதில் சொல்லும் சாமர்த்தியம் இல்லாததால் தான், பார்லிமென்டிலேயே தி.மு.க ஊழல், குடும்ப ஆட்சியால் திமுக அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதை திசை திருப்பவும், மக்களை ஏமாற்றவும் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு மீது மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பி வருகிறார்.
இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் மக்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள். படிக்கிறார்கள் அவர்களுக்கு உண்மை தெரியும். எனவே, மக்களை இனி ஏமாற்ற முடியாது. கடந்த 2019 லோக்சபா தேர்தலை போல், மோடிக்கு எதிரணியை உருவாக்க முடியாது என்ற அச்சம், ஸ்டாலினின் பேச்சில் வெளிப்படுகிறது. வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள், தமிழக மக்கள் தேசியத்தின் பக்கம் இருப்பதைக் காட்டும்." என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications