அமெரிக்காவிலிருந்து எம்பியாக திரும்பிய இளையராஜா.. தடபுடலாக வரவேற்ற பாஜக எம்.எல்.ஏக்கள்
சென்னை: அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி பாஜக எம்.எல்.ஏக்கள் உட்பட அக்கட்சியினர் விமான நிலையத்தில் திரண்டு சென்று வரவேற்பு அளித்தனர்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்தான்.

மாநிலங்களவை நியமன எம்.பிக்கள்
அதன் அடிப்படையில் தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்தார்.

விமர்சனங்கள்
இளையராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த நிலையில், அதற்காகவே இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டி இருந்தனர்.

வாழ்த்து மழை
அதற்கு இணையாக இளையராஜாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்தன. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்காக இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

எம்பிக்கள் பதவியேற்பு
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடரில் புதிதாக தேர்வான மாநிலங்களவை உறுப்பினர்கள், நியமன எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பதவியேற்றுக்கொண்டார். ஆனால், இசையமைப்பாளர் இளையராஜா அமெரிக்காவில் இருந்ததால் நேற்று அவர் பதவியேற்கவில்லை,

சென்னை திரும்பிய இசைஞானி
அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர் இன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சினிமா துறையிலிருந்து இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று இளையராஜாவை வரவேற்றார். அதேபோல் பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரண்டு சென்று வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications