ஹிந்தியா அல்ல, இந்தியா என்ற ஸ்டாலின்.. அங்கதான் பாஜக நாராயணனுக்கு ஒரு சந்தேகமாம்.. என்னன்னு பாருங்க
சென்னை: இது இந்தியா, "ஹிந்தி"யா அல்ல என அறிக்கைவிடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பாஜக நாராயணன் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது நம் நாடு இந்தியாவாகவே இருக்கிறது. "ஹிந்தி"யா என முதல்வர் ஸ்டாலின் மட்டுமே கூறுகிறார் என நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இந்தி ஆங்கிலத்திற்கு மாற்று மொழி என்றும் இணைப்பு மொழி என்றும் ஏற்கெனவே ஒரு முறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தது பெரும் கண்டனங்களை எழுப்பியது.
இந்த நிலையில் இந்தி அலுவல் மொழியாக ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் உரையாற்றினார்.

இந்தி மொழியும்
அப்போது அவர் உள்ளூர் மொழிகளும் இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் உயிர். நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமானால் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியைக் கற்க வேண்டும். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நமது உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த வேண்டும். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை நமது அதிகாரப்பூர்வ மொழியும் உள்ளூர் மொழிகளும் சேர்ந்து வேரோடு பிடுங்கி எறியும். அதற்கான நேரம் வந்துவிட்டது என தெரிவித்திருந்தார்.

22 பிராந்திய மொழிகள்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளை அலுவல் மொழியாக்கி ஹிந்தி தினத்திற்கு பதிலாக இந்திய மொழி தினமாக கொண்டாடப்பட வேண்டும். தமிழையும் மாநில மொழிகளையம் பின்னுக்குதள்ளி இந்திதான் தேசிய மொழி என்ற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு.

மொழி திணிப்பு
இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பத்கான முயற்சிகளிலேயே மத்திய அரசு முனைப்பாக உள்ளது. இந்தியாவின் வரலாறும் பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. இந்தி மொழி உருவாவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி உருவாகிவிட்டது. இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் முடிவாகும்.

பல மொழி பேசும் மக்கள்
பல மொழிகள் பேசும் மக்களை கொண்ட இந்திய ஒன்றியத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டுக்கு எதிரானது அமைச்சரின் கருத்து. இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா.. அதனை "ஹிந்தி"யா என்ற பெயரில் பிளவுப்படுத்தி பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

திராவிட நாடு
அவர் தனது ட்விட்டரில் கூறியிருக்கையில் நம் நாடு இன்னும் 'இந்தியாவாக' தான் உள்ளது. ஹிந்தியாவாக அல்ல என்கிறார் முதல்வர் ஸ்டாலின். நான்கு வருடங்களுக்கு திராவிட நாடு என்கிற கோரிக்கை வந்தால் வரவேற்கிறேன், வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று சொன்ன ஸ்டாலின் அவர்கள் இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்று உணர்ந்து கொண்டு இந்தியாவாகவே இருக்கிறது என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், 'ஹிந்தியா' என்று ஸ்டாலின் அவர்களை தவிர வேறு யாரும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications