"தமிழகத்தில் என்டிஏ ஆட்சி தான்!" வாக்குப்பதிவு முடிந்த கையோடு பாஜக சொன்ன மேட்டர்! கவனிக்கும் அதிமுக
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் சில முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளார். தமிழகத்தில் என்டிஏ கூட்டணியே பெரும்பான்மையைப் பெறும் என்றும் எளிதாக ஆட்சியை அமைப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும், மேற்கு வங்க தேர்தல் தொடர்பாகவும் அவர் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் இப்போது சட்டசபைத் தேர்தல்கள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழ்நாட்டில் 85% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 92% வாக்குகள் பதிவாகின.

பாஜக தலைவர்
இதற்கிடையே நியூஸ்18 ஆங்கில டிவி சேனலுக்கு பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பேட்டியளித்துள்ளார். அதில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் குறித்த கேள்விகளுக்கு சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். முதலில் மேற்கு வங்க தேர்தல் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்தக் கட்டத்தில் எவ்வளவு இடங்களில் வெல்வோம் என்ற துல்லியமான நம்பரை சொல்வது கடினம். இருப்பினும், தற்போதைய நிலவரங்களையும், மக்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவையும் வைத்துப் பார்க்கும்போது, நாங்கள் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சி அமைப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஆனால், இப்போதே எவ்வளவு இடங்களில் வெல்வோம் என்பதை என்னால் சொல்ல முடியாது.. 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்னும் இருக்கிறது. அதெல்லாம் முடிந்தால் தான் கூடுதல் தெளிவு கிடைக்கும். ஆனால் தற்போதைய நிலவரத்தை வைத்துப் பார்த்தால், நாங்கள் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை மிக எளிதாகக் கடப்போம் என்று நம்புகிறோம்" என்றார்.
தமிழ்நாடு தேர்தல்
தொடர்ந்து தமிழ்நாடு தேர்தல் குறித்துப் பேசிய அவர், "தமிழகத்தில் ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் திமுகவின் சனாதன எதிர்ப்பு நிலைப்பாடுகளுக்கு எதிராகப் பொதுமக்கள் மத்தியில் ஒரு வளர்ந்து வரும் அதிருப்தி இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களது பங்கு ஒரு ஆதரவு சக்தியாகவே இருக்கிறது. அங்கு எங்களது கூட்டணிக் கட்சியான அதிமுக தான் இந்தத் தேர்தல் களத்தை முன்னின்று வழிநடத்துகிறது.
நான் தனிப்பட்ட முறையில் பிரச்சாரப் பணிகளுக்காகத் தமிழகத்தில் களத்தில் இருந்தபோது, திமுக அரசுக்கு எதிராகப் பொதுமக்களின் கோபத்தைப் பார்க்க முடிந்தது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தத் தேர்தலில் திமுக மிகப் பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆட்சி எங்களுக்குத் தான்
எங்களிடம் ஏற்கனவே ஒரு பலமான கூட்டணி இருக்கிறது. எங்களது கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். இன்றைய நிலவரப்படி, தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கூட, விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் நான் பார்க்கவில்லை. எங்களது NDA கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.
என்டிஏ?
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பே அதிமுக தலைவர்கள், தாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியை அமைப்போம் என சொல்லி வந்தனர். ஆனால், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் கடைசி வரை என்டிஏ கூட்டணி என்றே சொன்னார்கள். இது அப்போதே வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் தேர்தலுக்கு பிறகும் என்டிஏ கூட்டணி என்று நிதின் நபின் கூறியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications