நம்பர் 2 ஏலம்.. ஐபிஎல் ஸ்டைலில்.. டைமிங்காக அடித்த பாஜக! பொன்முடி தீர்ப்பு வந்ததும் தாமரை அடித்த அடி
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனை தொடர்பாக பாஜக கிண்டல் செய்து போஸ்ட் போட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தை வைத்து பாஜக போஸ்ட் செய்துள்ளது.
ஐபிஎல் 2023 ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகளும் மாறி மாறி பல வீரர்களை ஏலம் எடுத்தது. இதில் ஏலம் எடுக்கப்பட்டவர்களை sold என்று அழைப்பார்கள். அவர்களின் அடிப்படை விலையை base price என்று அழைப்பார்கள்.
இதையே அடிப்படையாக வைத்து அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் பாஜக கிண்டல் செய்துள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட 3 வருட சிறை தண்டனையை 3 வருட கான்டராக்ட் வருடம்.. 50 லட்சம் அபராதத்தை.. 50 லட்சம் பேஸ் பைன்.. sold செய்யப்பட்டது புழல் சிறைக்கு என்று கூறி பாஜக கிண்டலாக போஸ்ட் செய்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தை வைத்து பாஜக போஸ்ட் செய்துள்ளது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால்.. தற்போது நம்பர் 2 ஏலம் செய்யப்பட்டுவிட்டதாக பாஜக போஸ்டில் கூறியள்ளது. டைமிங் பார்த்து பாஜேக்ஸ் எய்த போஸ்ட் இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
( ஏதாவது சொல்ல விரும்புறீங்களா? நீதிபதி கேட்ட ஒரு கேள்வி.. சட்டென பொன்முடி கொடுத்த ரியாக்சன்.. பின்னணி)
வழக்கு பின்னணி; இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரங்களை தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார். வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தீர்ப்பு என்ன: அப்போது பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். மருத்துவ அறிக்கை ஆய்வு செய்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அவகாசம்: மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது பொன்முடி தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு சட்டத்துறை செயலாளராக இருந்த தாங்கள் (நீதிபதி ஜெயச்சந்திரன்) தான் உத்தரவு பிறப்பித்ததாக சுட்டிக்காட்டினார். அதற்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன் நடந்த நிகழ்வு அது என்று நீதிபதி பதிலளித்தார்.
நிறுத்தி வைப்பு: தொடர்ந்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார். அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.


Click it and Unblock the Notifications
