"கால்கடுக்க நின்று மனு அளித்தால் அதனை நீரில் மிதக்கவிடுவது தான் நல்லாட்சியா?" - நயினார் நாகேந்திரன்
சென்னை: "மக்களிடம் இருந்து பெறப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களை ஆற்றில் மிதக்கவிட்டு மக்கள் நலனில் தான் காட்டும் அக்கறையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது திமுக அரசு" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம் உள்ளிட்ட பவேறு செயல்பாடுகளுக்கு மனு அளிக்கலாம்.

இந்நிலையில்,'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு அலுவலர்களிடம் வழங்கப்பட்ட நிலையில் அந்த மனுக்கள் ஆற்றில் மிதந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார் என விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை அருகே உள்ள கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்து வந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "கூட்டத்தில் கால்கடுக்க, வியர்வை சிந்தி நின்று மனு அளித்தால், அதனை நீரில் மிதக்கவிடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்களுடன் ஸ்டாலின் குறைதீர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் திராவிட மாடல் ஆட்சியின் அவல நிலைக்கான சாட்சி. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நான்காண்டுகளாய் மக்கள் குறைகளைக் கண்டுகொள்ளாது இருந்துவிட்டு தேர்தல் பருவம் ஆரம்பமாகியதும், பெரும் ஆரவாரத்துடன் குறைதீர்ப்பு முகாம்களைத் துவக்கிய அறிவாலய அரசு, தற்போது, மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆற்றில் மிதக்கவிட்டு மக்கள் நலனில் தான் காட்டும் அக்கறையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
குறைகளைக் கேட்டறிய தலைவர்கள் வரும் போது திரை கட்டி கழிவு நீர் ஓடைகளை மறைப்பதும், குறைகளைச் சுட்டிக்காட்டி அளிக்கப்படும் மனுக்களை ஆற்றில் வீசியெறிவதும் தான் திராவிட மாடலின் குறைதீர்ப்பு லட்சணமா? தனது பணிகளை விட்டு வந்து, கூட்டத்தில் கால்கடுக்க, வியர்வை சிந்தி நின்று மனு அளித்தால், அதனை நீரில் மிதக்கவிடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா?
மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தனது பெயரை சூட்டி அழகு பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் மனுக்கள் ஆற்றில் மிதக்கவிடப்படுவதைப் பார்த்து நடவடிக்கை எடுப்பாரா? அல்லது வழக்கம்போல விளம்பரங்களில் மூழ்கி அலட்சியம் காட்டப் போகிறாரா? மக்களை அலைக்கழித்து அவமதிக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கே அதன் அழிவுக்கு அடித்தளமிடும்! இது உறுதி!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications