வெள்ளித்தட்டில் விருந்து; முதல்வருக்கு கேள்விக்கணைகள் வீசும் பாஜக!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளித்தட்டில் விருந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்றை சுட்டிக்காட்டி, ஆடம்பரமே உன் பெயர் திமுகவா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
மழைவெள்ளத்தால் மக்கள் இன்னல் படும் சூழலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளித்தட்டில் முதலமைச்சர் விருந்து சாப்பிடுவதாக பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள பதிவில் திமுகவை கடுமையாக சாடியிருக்கிறார்.

முதல்வருக்கு விருந்து
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்றிருந்தார். அப்போது தொழிலதிபரும், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரமுகருமான டாலர் மணி முதலமைச்சருக்கு மதிய விருந்தளித்தார். அப்போது வெள்ளித்தட்டில் முதலமைச்சருக்கு உணவு பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதே போல் டம்ளர் உட்பட அவருக்கு உணவு பரிமாறப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் வெள்ளிப்பொருட்கள் எனக் கூறப்படுகிறது.

பாஜக பாய்ச்சல்
திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பூதக்கண்ணாடி கொண்டு ஏற்கனவே பாஜக ஆராய்ந்து வரும் நிலையில், இந்த வெள்ளித்தட்டு விவகாரம் வாலண்டியராக வந்து வம்பை இழுத்து விட்டிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆடம்பர பிரியர் என்கிற தொனியில் பாஜக செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

டி ஷர்ட் -ஷூ
ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தும் ஷூ, டி ஷர்ட், சைக்கிள், உள்ளிட்ட பொருட்களை சுட்டிக்காட்டி அதன் விலைகளை குறிப்பிட்டு பாஜக மற்றும் அதிமுக ஐடி விங் பிரிவு நிர்வாகிகள் அதகளம் செய்து வரும் நிலையில், திருப்பூரில் வெள்ளித்தட்டில் விருந்து சாப்பிட்ட விவகாரத்தை அவர்கள் கெட்டியாக இப்போது பிடித்துக்கொண்டனர். பாஜக செய்தி தொடர்பாளர் சூர்யாவை தொடர்ந்து அதிமுக ஐ.டி.விங்கும் விமர்சனக்கணைகளை ஏவி வருகிறது.

திமுக பதிலடி
இதனிடையே பிரதமர் மோடியின் விலையுயர்ந்த ஆடைகள் என்றப்பெயரிலும் அவரது வெளிநாட்டு பயணச் செலவு உள்ளிட்ட விவரங்களை சுட்டிக்காட்டியும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் இவ்விவகாரத்தில் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் தான் முதலமைச்சரின் புதிய டிஃபெண்டர் கார் குறித்து எழுந்த விமர்சனங்கள் குறைந்தன. அதற்குள் வெள்ளித்தட்டு ரூபத்தில் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
