கோயில் பெயரில் மோசடி.. பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் மீதான வழக்கை ரத்து செய்யாதீர்கள் - போலீஸ்
சென்னை: பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் பெயரில் வெளிநபர்கள் பணம் வசூலிக்கக்கூடாது என்று கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியும் பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் சுமார் ரூ.34 லட்சம் வசூல் செய்துள்ளதாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அமித்ஷா, நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த மே 30 ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.

என்ன புகார்?
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் பழுதடைந்த சிலைகளை சீரமைத்து தருவதாகக் கூறி நிதி திரட்டி மோசடி செய்ததாக கோயில் செயல் அலுவலர் அரவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆவடி மிட்னமல்லியை சேர்ந்த யூடிபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றவியல் போலீசார் காலை கைது செய்தனர்.

வழக்குப்பதிவு
அவரிடம் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் சுமார் 6 மணி நேரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் முடிவில் கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(d) IT Act தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன.

15 நாள் நீதிமன்ற காவல்
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் கார்த்திக் கோபிநாத்தை போலீசார் ஆஜர்படுத்தினர். அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அம்பதூர் விரைவு நீதிமன்ற நீதிபதி, கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஜாமீன்
இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் கோரி சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த பூந்தமல்லி நீதிபதி, பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து கடந்த மே 29 ஆம் தேதி அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

பதில் மனு தாக்கல்
இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயில் திருப்பணி என்ற பெயரில் மிலாப் செயலி மூலம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை ரூ.33,28,924 நிதியை கார்த்தி கோபிநாத் வசூலித்து உள்ளதாகவும், அதிலிருந்து சுமார் ரூ.1.80 லட்சம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் உத்தரவு மீறல்
கோயில் திருப்பணிக்களுக்காக தனி நபர் நன்கொடை வசூலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு வசூலித்து இருந்தால் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கோவில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியும் கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கார்த்திக் கோபிநாத் வெளிநாடுகளில் இருந்து பணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதால் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் மீறப்பட்டுள்ளது குறித்தும் விசாரணை நடத்த இருப்பதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு
வழக்கின் விசாரணை ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளதால் கார்த்தி கோபிநாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் வியாழக்கிழமைக்கு (ஜூலை 21) நீதிபதி சதீஷ்குமார் ஒத்தி வைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications