எடப்பாடிக்கு சசிகலா வாழ்த்தா? மோப்பம் பிடித்த டெல்லி.. அடுத்து நடக்க போவதுதான் உச்சகட்டம்
சென்னை: எடப்பாடியை தொடர்பு கொண்டு சசிகலா வாழ்த்து சொன்ன சங்கதியை, பாஜக மேலிட மோப்பம் பிடித்து விட்டது. இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியை தொடர்புகொண்டு டெல்லி மேலிடமும் விசாரித்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, விரைவில் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடலாம் என்று பிரத்யேக தகவல் வந்துள்ளது.
சசிகலா இதுவரை டிடிவி தினகரன், ஓ பன்னீசெல்வம், எடப்பாடி பழனிசாமி என யாருடனும் சேராமல் தனித்தே இருக்கிறார். அவரை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அதிமுக என்பது தான் இலக்காம்.எல்லாரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

அதனால் தான், அதிமுக தலைவர்களை பற்றி ஒருவார்த்தைகூட கடுமையாக விமர்சிக்காமல் அமைதியாக இருக்கிறாராம் சசிகலா. தன்னை சந்திக்க முயற்சித்த ஓபிஎஸ்ஸை இதுவரை சந்திக்கவில்லை. இதேபோல் எடப்பாடி நடத்திய மதுரை மாநாட்டுக்கும் போகவில்லை, ஓபிஎஸ் நடத்திய திருச்சி மாநாட்டுக்கும் போகவில்லை.
தினகரனுடன் இந்த நிமிடம்வரை இணையாமல் இருக்கவும் அதிமுக ஒண்றியணைய வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள். இந்த சூழலில்தான், அதிமுக - பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ளது.. இதை அதிமுக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதை அடுத்து ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம்.
இதனிடையே நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு இரவு 7 மணி வரை தலைமைக்கழகத்தில் இருந்தாராம் எடப்பாடி பழனிச்சாமி. சீனியர் லீடர்களுடன் விவாதித்தபடி இருந்த எடப்பாடி பழனிச்சாமி, "எல்லோரும் கிளம்புங்கள் ; இனி வருகிற ரியாக்ஷன்களை எதிர்கொள்வோம். எதுவாக இருந்தாலும் எனது கவனத்துக்கு கொண்டு வாருங்கள்" என்று கூறியிருக்கிறார்.
பிறகு, கே.பி.முனுசாமியுடன் சில விஷயங்களை மனம்விட்டு பேசியிருக்கிறார்.. குறிப்பாக. தம்பிதுரையின் டெல்லி லாபியில் பல துரோகங்கள் நடந்துள்ளது என்று கே.பி.முனுசாமியிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா போன் : இப்படி இவர்கள் பகிர்ந்து கொண்டிருந்த நேரத்தில், கே.பி.முனுசாமியின் ஃபோனுக்கு சசிகலா வந்துள்ளார். அதைப்பார்த்து, சசிகலா லைன்ல வர்றாங்க என சொல்ல எடுத்து பேசுங்க, என்ன சொல்றாங்கன்னு கேளுங்க" என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, சசிகலாவின் லைனை முனுசாமி அட்டெண்ட் பண்ணியிருக்கிறார்.
அப்போது, "என்,.டி.ஏ. கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய முடிவு பாராட்டுதலுக்குரியது. பழனிச்சாமியிடம் ஃபோனை கொடுக்க முடியுமா?" என்று சசிகலா சொன்னதும் எடப்பாடியிடம் ஃபோனை கொடுத்துள்ளார் முனுசாமி.
ஃபோனை எடப்பாடி வாங்கியதும், அவரிடமும், தற்போது எடுக்கப்பட்ட முடிவுக்கு வாழ்த்துக்களை சொல்லியுள்ளார் சசிகலா. வாழ்த்துகளைச் சொல்லி விட்டு ஃபோனை துண்டித்துக்கொண்டாராம். ஆனாலும், சசிகலா ஃபோன் செய்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம் எடப்பாடி பழனிச்சாமி.
அதேசமயம், எடப்பாடியை தொடர்புகொண்டு சசிகலா வாழ்த்து சொன்ன சங்கதியை, பாஜக மேலிட மோப்பம் பிடித்து விட்டதாம். இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியை தொடர்புகொண்டு டெல்லி மேலிடமும் விசாரித்ததாம்.
இதனையடுத்து சசிகலாவிடம் அந்த புள்ளி பேசினாராம். எடப்பாடிக்கு எதிராக இந்த புள்ளியை வைத்துத்தான் இதுவரையிலும் அரசியல் செய்து வந்ததாம் பாஜக. இனியும் அதே அரசியலைச் செய்யுமாம். அந்த வகையில், சசிகலாவுடன் கடந்த பல மாதங்களாக தொடர்பில் இருக்கிறார் அந்த முக்கிய புள்ளி.
அவரிடம் பேசிய சசிகலா, பாஜக கூட்டணியை முறித்தது தவறு என்பதைத்தான் சொன்னேன். வாழ்த்துக்கள் எல்லாம் சொல்லவில்லை" என்று விளக்கம் தந்தாராம்.
இதனிடையே சசிகலா உண்மையில் அவர் வாழ்த்துதான் சொல்லியிருந்தார் என்றே தகவல்கள் வருகிறது,. காரணம், பொருளாதார ரீதியாக கடந்த 1 வருடமாக தவித்து வரும் சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சம்மந்தமில்லாத பல சொத்துக்களை பாஜக முடக்கி வைத்திருப்பதாகவும், அதனை விடுவிக்கச் சொல்லி எத்தனையோ முறை டெல்லியின் உதவியை அனுகியும் சசிகலாவுக்கு பாஜக உதவவில்லையாம். அதனாலேயே பாஜக மீது கடுப்பில் இருந்துள்ளாராம் சசிகலா. அந்த கோபத்தில் தான் எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
இதனிடையே டெல்லி மேலிடம் வரை தகவல் போனதால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது தவறு என்று விரைவில் அறிக்கை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, அந்த முக்கிய புள்ளி தொடர்புகொண்டு பேசியதை அடுத்து அந்த அறிக்கை வரலாம் என்கிறார்கள்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் முடிவினை அடுத்து டெல்லி மேலிடம் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்திருக்கிறதாம். அங்கு விசாரணையும் நடக்க போகிறதாம். அதன்பிறகு எடப்பாடியிடம் டெல்லி மேலிடம் பேச வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல்கள் உலா வருகின்றன.












Click it and Unblock the Notifications