"இதய பகுதியை வெட்டி எறிந்த வரலாறு".. முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி வைத்த முக்கிய கோரிக்கை இதுதான்
முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழக அரசின் ஆணையை மகிழ்வுடன் வரவேற்பதாகவும், தமிழறிஞர் மனோண்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய முழுப் பாடலையும் பாட முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றும் பாஜகவின் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்... தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து முதல்வர், அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதேபோல, மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் எழுதிய "நீராருங் கடலுடுத்த" என்ற பாடல் 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது, எழுந்து நிற்பதில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வணக்கம்
1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் என்னும் நூலில் "தமிழ் தெய்வ வணக்கம் " என்ற தொகுப்பின் கீழ் உள்ள ஒரு பகுதியை நாம் தமிழ் தாய் வாழ்த்தாக பாடி கொண்டிருக்கிறோம். ஆனால், இது 1913ம் ஆண்டு முதல் முறையாக தமிழ் சங்கத்தில் நீராருங் கடலுடுத்த என்ற பாடல் இடம்பெற்றுள்ளது... அதற்கு பிறகு 1914ம் ஆண்டு முதல் கரந்தை தமிழ் சங்கத்தில் இந்த பாடலை பாடி வந்துள்ளார்கள்...

தமிழ் சங்கம்
தமிழக அரசின் பாடலாக இதை அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களுக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தனர்.. அந்த வகையில், தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, 1970ம் ஆண்டு, மார்ச் 11ம் தேதியன்று நடந்த அரசு விழாவில், அன்றைய முதல்வர் கருணாநிதி பேசும்போது, "இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். 'நீராருங் கடலுடுத்த' எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும்" என்று அறிவித்தார்.

வானதி சீனிவாசன்
இந்நிலையில்தான், இன்றைய முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பினை, பல கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.. அந்த வகையில், பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் வரவேற்றுள்ளார்.. அத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.

கோரிக்கை
இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில், "தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழக அரசின் ஆணையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். தமிழறிஞர் மனோண்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய முழுப் பாடலையும் பாடமுதல்வர் ஸ்டாலின் உத்தரவிடவேண்டும்.. இதயப்பகுதியை வெட்டி எறிந்த வரலாறு சரி செய்யப்படவேண்டும்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடவுள் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த அறிவிப்பை கருணாநிதி அறிவிப்பதற்கு முன்பு, அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், கடவுள் வாழ்த்து பாடல்கள் பாடப்பட்டு வந்தன.. குறிப்பாக, "கஜவதனா கருணாகரனா" "வாதாபி கணபதே" போன்ற விநாயகர் பாடல்களே பெரும்பாலும் பாடப்பட்டது.. ஒருசிலர் தெலுங்கு கீர்த்தனைகளை பாடினார்கள்.. மேலும் சிலர் சரஸ்வதி பாடல்களை பாடினார்கள்..

கமெண்ட்
"நீராருங் கடலுடுத்த" பாடலே இனிமேல் அரசு விழாக்களில் பாடவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தபிறகு, கடவுள் வாழ்த்து பரவலாக குறைந்துவிட்டது. "இதய பகுதி" என்று கடவுள் வாழ்த்து பாடலை தான் வானதி சொல்கிறார் என்றே தெரிகிறது. "தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால், உங்கள் விருப்பம்போலவே, கடவுள் வாழ்த்து பாடி கொள்ளுங்கள்" என்று வானதியின் ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications