வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டிருந்தது. அதில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டே இத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை
சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு கட்சிகளின் வாக்குறுதிகளும் மக்களிடையே பேசு பொருளாக மாறியிருந்தது. குறிப்பாக ரூ.8,000 கூப்பன் கொடுப்போம் என்று சொன்ன திமுக, வீட்டுக்கு வீடு பிரிட்ஜ் வழங்கப்படும் என்று அதிமுக கொடுத்த வாக்குறுதி மக்களிடையே பேசு பொருளாக மாறியிருக்கிறது. இப்படி இருக்கையில் பாஜகவின் வாக்குறுதியும் விவாதமாக வெடித்திருக்கிறது.
வாக்குறுதிகள் என்ன?
"குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும். ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற ஜிரோ-எப்ஐஆர்' (Zero-FIR) பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மற்றும் 'நிர்பயா' நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
பெண்களுக்கு அதிகாரம்
பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும்.
திருப்பரங்குன்றம்
முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம். திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம்.
போதைப்பொருள்
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய 'தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை உருவாக்கப்படும். கடல்வழி கடத்தலைத் தடுக்க கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு', துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மேலும், மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இறுதி சடங்கு செலவுகளுக்காக ரூ.10,000
இந்த வாக்குறுதிகளில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் யாராவது இயற்கை எய்தினால் அவர்களின் இறுதி சடங்கு செலவுகளுக்காக ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, மானியம் வெட்டு, மத அரசியல், சாதிய பாகுபாடுகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்து வாழ வழியை உருவாக்கி கொடுக்க சொன்னால், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.10,000 என அறிவித்திருப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என்று நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications