"ஹலால் உணவை இந்துக்கள் ஏன் சாப்பிடனும்?”.. ஹோட்டல் ஊழியரிடம் வம்பு செய்த பாஜக ராம சீனிவாசன்!
சென்னை: "ஏன் ஹலால் உணவு போடுறீங்க?.. இந்துக்கள் எப்படி சாப்பிடுவது?" என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் ஹோட்டல் பணியாளரிடம் கேள்வி எழுப்பியது விமர்சனங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் பேராசிரியர் ராம சீனிவாசன். பாஜகவில் மாநில பொதுச் செயலாளராகவும், நபார்ட் வங்கி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு 2ஆம் இடம் பிடித்தார். இந்நிலையில், அவர் ஹோட்டல் ஒன்றில் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டிக்காக பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார் ராம சீனிவாசன். அப்போது, அங்கு பணியாற்றும் ஊழியரிடம், இங்கு ஹலால் செய்யப்படுகிறதா எனக் கேட்டு, ஹலால் உணவை இந்துக்கள் ஏன் சாப்பிடணும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேராசிரியர் ராம. சீனிவாசன், ஹோட்டல் நிறுவன ஊழியரை அழைத்து, "இங்கு ஹலால் பண்ணிதான செய்றீங்க?" எனக் கேட்கிறார். அதற்கு ஊழியர், "ஆமா சார், ஹலால் பண்றதுதான்" எனக் கூறுகிறார். அதற்கு ராம சீனிவாசன், "ஓனர் இந்துவா? முஸ்லீமா?" எனக் கேட்கிறார். அதற்கு ஊழியர், "ஓனர் இந்து தான்" என பதில் அளிக்கிறார்.
உடனே, "சாப்பிட வர்றவங்க எல்லாம்?" எனக் கேள்வி எழுப்ப, "எல்லா மக்களும் வர்றாங்க" என ஊழியர் பதில் அளிக்கிறார். அதற்கு ராம சீனிவாசன், "முஸ்லீம் மத முறைப்படி ஹலால் செய்தால் நாங்க எல்லாம் எப்படி சாப்பிடுறது?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
அதைத்தொடர்ந்து, "பெரும்பாலும் எல்லா உணவகங்களிலும் ஹலால் செய்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன், அந்த நம்பிக்கையை நான் ஏற்கிறேன். ஹலால் செய்த உணவை நாங்கள் சாப்பிடுகிறோம். ஆனால், என் சென்டிமெண்டை ஏற்கிறீர்களா?" என கேள்வி எழுப்பி உள்ளார் ராம சீனிவாசன்.
உணவுகள் ஹலால் செய்யப்படுவது பற்றி ஹோட்டல் ஊழியரிடம் பாஜகவை சேர்ந்த ராம சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications