கருப்புச்சட்டை பிரியா! CM விஜய்யை சந்திக்காமல் கடிதம் எழுதியது ஏன்? சென்னை மாநகராட்சியில் போர்க்கொடி
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா தலைமையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்ற சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது... வார்டு மேம்பாட்டு நிதி மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய காலத்தில் நிதி விடுவிக்கப்படாததை கண்டித்தும், அவசர கால நிதி வழங்காத தமிழக அரசை எதிர்த்தும் இப்படியொரு போராட்டம் வெடித்து கிளம்பி உள்ளது.. அதுமட்டுமல்ல, முதல்வருக்கு மேயர் பிரியா எழுதியிருக்கும் கடிதம் ஒன்று, மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற கூட்டம் நடைபெற்றது.. அப்போது நிதி நெருக்கடி காரணமாக மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியவில்லை என்று கவுன்சிலர்கள் கொந்தளித்து பேசினார்கள்.

இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு கரம் நீட்டின.
துணை மேயர் மகேஷ்குமார் பேச்சு
துணை மேயர் மகேஷ்குமார் கூட்டத்தில் பேசும்போது, "எம்எல்ஏக்களுக்கு வழங்குவதுபோல் உடனடியாக கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை விடுவிக்க வேண்டும், வேளச்சேரி மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை தமிழக அரசு முடக்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவுக்குப் பதிலாக தினசரி 100 ரூபாய் உணவுப் படியாக வழங்க வேண்டும், அம்மா உணவகம் மற்றும் தனியார் பள்ளி காலை உணவுத் திட்டத்திற்காக மாநகராட்சி செலவிடும் கோடிக்கணக்கான ரூபாயை அரசு உடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும், அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக 21,000 கோடி ரூபாய் வரை கடன் பெறுவதைப் போல, மாநகராட்சியின் நிதித் தேவையையும் பரிசீலித்து சிறப்பு நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேயர் பிரியா இது தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று நகராட்சி நிர்வாகத் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரிடம் பேசி உடனடியாக நிதியைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
உடனே பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எழுந்து, "நிதி வழங்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியில் செல்லலாம் என்று ஆக்ரோஷமாக கூறினார்.
மக்கள் ஆட்சியா? கவர்னர் ஆட்சியா?
விசிக கவுன்சிலர் யாழினி பேசும்போது, முந்தைய ஆட்சியில் பாகுபாடின்றி நிதி ஒதுக்கப்பட்டதையும், வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் சென்னையில் மலம் கலந்த குடிநீர் வினியோகிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் தன்வசம் உள்ளதாக கூறி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அரசு நடத்திய மழைக்கால முன்னெச்சரிக்கை கூட்டங்களுக்கு தாங்கள் அழைக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய மேயர் பிரியா, "இது மக்கள் ஆட்சியா அல்லது கவர்னர் ஆட்சியா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியது மாமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேயர் பிரியா பேட்டி
இந்த கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் மேயர் பிரியா.. அப்போது, "வார்டு மேம்பாட்டு நிதியையும், மாமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் தொடர்ந்து நிறுத்தி வைப்பதை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் அரசு தரப்பிலிருந்து ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிதி விடுவிக்கப்படாததால், சென்னையில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு குடிமைப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.. மாநகராட்சி நிர்வாகத்தின் அன்றாட பணிகளில் இதனால் சிக்கல் ஏற்படுகின்றன.. இவைகளை முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
வார்டு அளவில் மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு கவுன்சிலர் நிதி முக்கியமானதாக இருக்கும் நிலையில், அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்.
முதல்வர் விஜயை நேரில் சந்திக்காமல் கடிதம் மூலம் ஏன் கோரிக்கை வைத்தீர்கள் என்று கேட்கிறீர்கள்.. என்னுடைய கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் விஜய்க்கு ஏற்கனவே கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளேன்.. தேவைப்பட்டால் முதல்வர் விஜயை நேரில் சந்தித்துப் பேசுவேன் என்றார்..
கருப்பு உடையுடன் கோரிக்கை
மாமன்ற கூட்டத்தில், நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், நிர்பயா நிதி உள்ளிட்ட 150 கோடி ரூபாயை வங்கியில் நிலையான வைப்பு நிதியாக வைத்து, அதன் மூலம் 300 கோடி ரூபாய் கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 3,935 தற்காலிக தூய்மை பணியாளர்களின் பணி நீட்டிப்பு உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாலும், அரசுக்கு எதிராக கருப்பு உடை அணிந்து மேயர் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் இந்தச் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது..!!


Click it and Unblock the Notifications
