முதல்வர் ஸ்டாலின், ராகுல், பிரியங்கா ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கம்! ரஜினிக்கும் இல்லை!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், உத்தரப்பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
அது போல் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளுக்கான ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கினார்.

அதன் பிறகு ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ட்விட்டரின் சின்னமான பறவையை எடுத்துவிட்டு நாய் படத்தை வைத்தார். பின்னர் பறவை படத்தையே கொண்டு வந்தார். குறிப்பாக ட்விட்டரில் ப்ளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு கட்டணத்தை நியமித்திருந்தது.
இதற்காக காலக்கெடுவும் கொடுக்கப்பட்டு, அதற்கு மேல் மாத சந்தா செலுத்தாவிட்டால் ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சந்தா செலுத்த காலக்கெடு முடிந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்களின் டிவிட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கியது. செல்போன் செயலியில் மாத சந்தாவான ரூ 900 கட்டணம் செலுத்தாததால் ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் தனிப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய அலுவலக கணக்கில் கிரே கலர் டிக் இருக்கிறது. அது போல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட கணக்கின் ப்ளூ டிக்குகளும் நீக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் ப்ளூ டிக்குகளும் நீக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர்கள் ஷங்கர், அட்லி, லோகேஷ் கனகராஜ், செல்வராகவன் உள்ளிட்டோரின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.

மாத சந்தா ரூ 900 கட்டியதால் கமல், சூர்யா ஆகியோரின் ப்ளூ டிக் நீக்கப்படவில்லை. இனி மாத சந்தா கட்டினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்காக ப்ளூ டிக் வரும் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ப்ளூ டிக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications