லாஸ் ஏஞ்சல்ஸில் வீடு; ஒரு பாட்டுக்கு 3 கோடி: ரூ.1,728 கோடி சொத்து! ரஹ்மானின் ரகசியம்
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுக்க துபாய், லண்டன் எனப் பல நாடுகளில் சொந்தமான ஸ்டுடியோக்கள் இருக்கின்றன என்பதும் அவரது சொத்து மதிப்பு ரூ.1,728 கோடியை எட்டியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாய்ரா பானு தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்த அடுத்த நொடியிலிருந்து மீண்டும் மீடியாக்களின் கவனம் ஏ.ஆர்.ரஹ்மான் மீது விழத் தொடங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகால குடும்ப உறவிலிருந்து விலகுவது பற்றி ஒரு நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார் சாய்ரா. ரஹ்மானும் தன் பங்குக்கு 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என நினைத்திருந்தேன் என்று தன் கவலையைப் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் ரஹ்மான் தனது மனைவியைப் பிரிந்தால் எத்தனை கோடி ரூபாயை அவர் ஜீவனாம்சமாக வழங்க வேண்டி வரும் என சில ஊடகங்கள் ஊகித்து செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்தச் செய்தி அதைப் பற்றியதல்ல. The Financial Express ரஹ்மானின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி லாஸ் ஏஞ்சல்ஸில் மட்டும் 3 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு பங்களா இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிப்படியில் பயணம் செய்துவருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா'வின் மூலம் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட் சினிமாவுக்கு பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.
1993இல் அவருக்கு முதல் தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2009இல் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் அவரை ஹாலிவுட் சினிமா உலகிற்கு அழைத்துச் சென்றது. முதல் முயற்சியிலேயே அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றார்.
இதனால் அவர் ஒரே சமயத்தில் பாலிவுட், ஹாலிவுட் என பறந்து பறந்து இசையமைக்க ஆரம்பித்தார். ஆகவே அவருக்குச் சென்னையை தாண்டி மும்பை, லாஸ் ஏஞ்சல்ஸ், துபாய் என பல இடங்களில் ஸ்டுடியோக்களை அமைத்தார். சென்னையில் உள்ள வீடுகள்: கோடம்பாக்கத்தில் இவரது முதல் ஆடம்பர பல படுக்கையறைகள் வசதிகள் கொண்ட பங்களா ஒன்று உள்ளது. அதில் ஒரு ஸ்டுடியோ ஒன்றும் அமைந்துள்ளது. இந்த வீடு அவரது வெற்றியின் அடையாளமாக இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள ஸ்டுடியோஸ்: ரஹ்மானின் முதல் ஸ்டுடியோ என்றால் அது பஞ்சதன் ரெக்கார்ட் இன் தான். இது சென்னையில் அவரது வீட்டின் அருகே உள்ளது. இது இந்தியாவில் உள்ள பிரபலமான ஸ்டுடியோக்களில் ஒன்று. அடுத்து ஏஎம் ஸ்டுடியோஸ். இதுவும் அவரது வீடு உள்ள சாமியார் மடம் பகுதியில்தான் உள்ளது. சர்வதேச தரத்தில் துபாயில் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவை அமைத்துள்ளார். லண்டனில் கேஎம் மியூசிக் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ இயங்கிவருகிறது. இதே லண்டன் நகரில் உள்ள அபே ரோட் ஸ்டுடியோஸ் இவருக்குச் சொந்தமானதுதான்.
ஆடம்பரக் கார்களின் பட்டியல்: பல கோடிகளில் மதிப்புள்ள கார்களை இவர் வைத்துள்ளார். அவரது சேகரிப்பில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள Mercedes-Benz உள்ளது. 1 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஜாகுவார் ஒன்றும் வைத்துள்ளார். இவரது மகள்கள், கதீஜா,ச்ரஹிமா ஆகிய இருவரும் 2022 ஆம் ஆண்டு, சுமார் ரூ. 3 கோடி மதிப்பில் போர்ஷே டெய்கான் EV காரை வாங்கினார்கள்.
ரஹ்மானின் சம்பளம் என்ன?: ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் மின்ட் ஆகியவை வெளியிட்டுள்ள ஆதாரங்களின்படி, ரஹ்மான் ஒரு பாடலுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இந்தச் சம்பள விசயத்தில் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு சில நேரம் சலுகைகளையும் அளித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. CAKnowledge மற்றும் Lifestyle Asia ஆகியவற்றின் அறிக்கைப்படி, ரஹ்மான் தனது பாடல் கட்டணத்தைத் தவிர, ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சிக்கு ரூ. 1 முதல் 2 கோடி வரை வசூலிக்கிறார் என்றும் தெரிகிறது.
மொத்த சொத்து மதிப்பு: இசையமைப்பதற்கான சம்பளம் மூலம் மட்டுமே இல்லாமல் சில பிராண்டுகள் மூலம் ரஹ்மான் தன் வருமானத்தைப் பெருக்கி வருகிறார். கூடவே ரியல் எஸ்டேட் சொத்துகள் மூலம் அவரது முதலீடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1,728 கோடியை எட்டியுள்ளது என்று ஜாக்ரன், டிஎன்ஏ ஆகிய ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கைகள் மூலம் அறிகிறோம். இதில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள 3 மில்லியன் மதிப்புள்ள பங்களாவும் அடங்கும்.












Click it and Unblock the Notifications