கிண்டி டூ செங்கல்பட்டு வரை பஸ் பே.. ஆட்டோ, பைக்கு தடை விதித்தால் நெரிசல் இல்லாத பயணம் சாத்தியம்
சென்னை: சென்னையில் தினமும் ஜிஎஸ்டி சாலையில் மோசமான நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், இதற்கு மாற்று தீர்வுகளை அரசு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு இடையே மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிலை கட்டுப்படுத்த பஸ் பே அமைக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிண்டி கத்திபாரா முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை பஸ் பே அமைக்க வேண்டும் என்றும் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதித்து அமைத்தால் மிக விரைவாக நெரிசல் இல்லாத பயணம் சாத்தியம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சட்டசபையில் நேற்று காலையில் நடந்த கேள்வி நேரத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'சென்னையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பாதையாக இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அதை நிறைவேற்ற தயாராக இருந்தது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இந்த அரசு அதை நிறைவேற்ற முன்வருமா?' என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 'அது உண்மை. சென்னை-கன்னியாகுமரி 8 வழிச்சாலையாக உயர்த்துவதற்கான அறிக்கையை கொடுத்துள்ளோம். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து மத்திய அமைசசரிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் விவாதித்தோம். சென்னையை நோக்கி வருபவர்கள் திருச்சியில் இருந்து செங்கல்பட்டுக்கு 4 மணிநேரத்தில் வந்தாலும், செங்கல்பட்டில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வர 3 மணி நேரம் ஆகிவிடும்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னது அரசின் கவனத்தில் இருக்கிறது. எனவே சென்னையை சுற்றியுள்ள சாலைகளை மாற்றி அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு கொண்டு வந்து, அடுத்த மாதம் (செப்டம்பர்) மத்திய அமைச்சரிடம் இதுபற்றி பேசி அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். உறுப்பினர் சொன்ன திட்டத்துக்கான பணிகளும் நடக்கும்' என ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார்.
தமிழக அரசு தாம்பரம் முதல் செங்கல்பட்டு இடையே மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் தாம்பரத்தை கடந்து பெருங்களத்தூர், வண்டலூரில் மேம்பாலம் உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் மேம்பாலம் இல்லை.. எனவே கடந்த ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை.. தற்போதைய சூழலில் நெரிசல் இல்லாத விரைவான பயணம் அமைய வேண்டும் என்றால், ஹைதராபாத், அஹமதாபாத் பாணியில் பஸ் பே அமைக்கலாம். குறிப்பாக கிண்டி கத்திப்பாராவில் தொடங்கி, செங்கல்பட்டு வரை பஸ் பே அமைத்தால், எளிதாக நெரிசல் இல்லாமல் வாகனங்கள் நகரத்தை விட்டு 30 முதல் 40 நிமிடங்களில் வெளியே போய்விட முடியும்.
அதேநேரம் இந்த பஸ்பேவில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்றும், ஹைதராபாத் பாணியில்நடைமுறைப்படுத்தி, முக்கிய இடங்களில் ஏறுவதற்கு மற்றும் இறங்குவதற்கு வழித்தடங்கள் வைப்பதுடன், ஏறும் இடத்திலேயே சுங்க கட்டணம் வசூலிக்கும் வகையில் கட்டுமானங்களை அமைப்பதும், பல ஆண்டுகளுக்கு நெரிசல் இல்லாத பயணத்தை உறுதி செய்ய முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கிண்டியில் தொடங்கி செங்கல்பட்டு வரை பஸ் பே அமைத்தால் எளிதாக வாகனங்கள் நகரத்தை விட்டு வெளியே சென்றுவிடும். அத்துடன் நகரத்திற்கு வெளியே வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் இருக்காது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
