சென்னையில் பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் ஓட தொடங்கின.. நிம்மதி பெருமூச்சு விடும் பயணிகள்
சென்னை: அரசு பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில், அமைச்சரின் அறிவுறுத்தலையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
சென்னையில் அரசு பேருந்து ஊழியர்கள் திடீரென மாலை 5 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டை, கேகே நகர், வடபழனி, ஆவடி உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னறிவிப்பு எதுவும் இன்றி அரசு பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பேருந்துகளுக்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அதிலும் திங்கள் கிழமையான இன்று பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாராக இருந்த பயணிகள் பேருந்துகள் வராததால் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பேருந்து வராததால் பயணிகள் சில இடங்களில் ஆவேசம் அடைந்தனர்.
அதன் பின்னரே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த தகவல் பரவியது. இதனால் முன்னறிவிப்பு இன்றி இப்படி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் நாங்கள் என்ன செய்வது என்று பயணிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பேருந்து ஓட்டுநர்கள் தன்னிச்சையாகப் போராட்டத்தைத் தொடங்கியதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதற்கு தொமுச பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்கப்படும் என்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பின்னரே பேருந்துகள் மெல்ல மீண்டும் இயங்க தொடங்கியது. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications